மூலனூர் அருகே குடும்ப தகராறில் 4 வயது சிறுவனை கொலை செய்து தாய்-பாட்டி தற்கொலை
மூலனூர் அருகே குடும்ப தகராறில் 4 வயது சிறுவனை கொலை செய்து தாய்-பாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
விவசாயக்கூலி தொழிலாளி
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா செங்காளிவலசு கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிபாசு (37). விவசாய கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி நந்தினி (30). இவர்களது மகன் திருக்குமரன் (4). ஜோதிபாசுவின் மாமியார் தமிழரசி (52).
ேஜாதிபாசு தனது மனைவி, மகன் மற்றும் மாமியாருடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் அருகே உள்ள கன்னிவாடி கிராமத்திற்கு வந்து வாடகை வீட்டில் குடியிருந்தனர்.
கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த ஜோதிபாசு, வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமல் வீண் செலவு செய்து வந்தாராம். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் காலையில் மீண்டும் கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் ஜோதிபாசு வேலைக்கு சென்று விட்டார்.
தற்கொலை
அதன் பின்னர் அவர்களது வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் அக்கம், பக்கத்தினர் அங்கு வந்து நந்தினி வீட்டின் கதவை தள்ளிக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது வாயில் நுரை தள்ளிய நிலையில் சிறுவன் திருக்குமரன் இறந்து கிடந்தான். அவனது அருகில் நந்தினி தூக்கில் பிணமாக தொங்கினார். தமிழரசி வாயில் நுரை நள்ளிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இது குறித்து மூலனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே போலீசார் விரைந்து வந்து தமிழரசியை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழரசியும் இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மூலனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திடுக்கிடும் தகவல்
விசாரணையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழரசி கத்தாரில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். அப்போது கிடைக்கும் சம்பளத்தை சேமித்து உறவினர் ஒருவருக்கு அனுப்பி அதனை சேமித்து வைக்குமாறு கூறியுள்ளார். பின்னர் கத்தாரில் இருந்து சொந்த ஊருக்கு வந்த தமிழரசி, தான் அனுப்பிய பணத்தை உறவினரிடம் கேட்டுள்ளார்.
ஆனால் அவர் பணத்தை செலவு செய்து விட்டதாக கூறியதால் அதிர்ச்சி அடைந்தார். இந்த நிலையில்தான் தனது மகள், மருமகன், பேரனுடன் மூலனூர் பகுதிக்கு வந்து குடியேறியுள்ளார். இங்கு வந்த இடத்தில் ஜோதிபாசுவும் குடும்பத்தை கவனிக்காததாலும், வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணம் கைக்கு கிடைக்காததாலும் தமிழரசிக்கும், நந்தினிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த இருவரும் ஜோதிபாசு வேலைக்கு சென்ற பிறகு, சிறுவனுக்கு விஷத்தை கொடுத்துவிட்டு தாங்களும் குடித்துள்ளனர். இதில் விஷம் குடித்த சிறிது நேரத்தில் திருக்குமரன் இறந்துள்ளான். மகன் இறந்து விட்ட நிலையில் நாம் பிழைத்துவிடக்கூடாது என்ற அதிர்ச்சியில் விஷம் குடித்த பிறகு, நந்தினி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இ்வ்வாறு போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குடும்ப பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் கன்னிவாடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது