மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்; 1,020 பேர் கைது

மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 1,020 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-07 20:13 GMT

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்

விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டத்தை கட்டுப்படுத்த தவறியதாக மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரெயில் மறியல் மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர். அதன்படி திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பு மாநிலக்குழு உறுப்பினர் சுகந்தி, மாவட்ட செயலாளர் ராஜா ஆகியோர் தலைமையில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கட்சி கொடிகளுடன் திரண்டனர்.

இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் லெனின், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மோகன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இவர்கள் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே இருந்து புறப்பட்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி தலைமை தபால் நிலைய சிக்னலில் மறியல் செய்வதற்காக ஊர்வலமாக வந்தனர்.

போலீசாருடன் தள்ளு, முள்ளு

உடனே அங்கு போலீஸ் உதவி கமிஷனர் கென்னடி தலைமையில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்த போலீசார் இரும்பு தடுப்புகளை வைத்து மறியலுக்கு வந்தவர்களை தடுத்து நிறுத்தினார்கள். ஆனாலும் இரும்பு தடுப்புகளை இடித்து தள்ளிவிட்டு முன்னேறி வந்தனர். இதனால் போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதில் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுஜாதா கையில் லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் அனைவரும் தலைமை தபால் நிலைய போக்குவரத்து சிக்னலில் நான்குரோடுகளையும் மறித்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

மேலும், ஒரு சிலர் தலையில் முக்காடு போட்டு பிணம் போல் படுத்தும், பக்கோடா விற்பது போல் நடித்தும் நூதனமாக தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அனைவரையும் கைது செய்து வேனில் ஏற்றி சென்று மத்திய பஸ் நிலையம் அருகேயுள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதில் 70 பெண்கள் உள்பட மொத்தம் 420 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் சிறிதுநேரத்தில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த மறியல் போராட்டத்தால் தலைமை தபால்நிலைய சிக்னல் பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

1,020 பேர் கைது

இதேபோல் திருச்சி புறநகர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் கனகராஜ் தலைமையில் நடந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜெயசீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தபால் நிலையத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது போலீசார் தடுத்து நிறுத்தியதால், நம்பர் ஒன் டோல்கேட் ரவுண்டானா அருகே அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும் திருவெறும்பூர் பஸ் நிறுத்த பகுதியில் தாலுகா செயலாளர் மல்லிகா தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர் ஊர்வலமாக ரெயில் நிலையத்திற்கு சென்று, ரெயில் மறியலில் ஈடுபட முயன்றனர். அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் உள்பட 140 பேர் கைது செய்யப்பட்டனர். மணப்பாறை தபால் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட 151 பேரை மணப்பாறை போலீசார் கைது செய்தனர். இதன்படி திருச்சி மாவட்டத்தில் 1020 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்