மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்

குகையநல்லூர் வாலிபர் சாவுக்கு நீதி வழங்கக்கோரி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2023-06-27 13:11 GMT

காத்திருப்பு போராட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வேலூர் மாவட்டக்குழு சார்பில் காட்பாடி தாலுகா குகையநல்லூர் வாலிபர் சரத்குமார் சாவிற்கு நீதி வழங்கக்கோரி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் தயாநிதி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்க மாவட்ட தலைவர் காத்தவராயன் ஆகியோர் தலைமை தாங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பகுதி செயலாளர்கள் சுடரொளியன், செல்வி, பாண்டுரங்கன், சரவணன் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ், மாநில துணை பொதுச்செயலாளர் செல்வன், மாவட்ட செயலாளர் குபேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் சங்கரி ஆகியோர் போராட்டத்தை தொடங்கி வைத்து கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

வாலிபர் சாவுக்கு நீதி

காட்பாடி தாலுகா குகையநல்லூர் கிராமத்தை சேர்ந்த வாலிபர் சரத்குமார் மேல்பாடி போலீஸ் நிலையம் முன்பு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தீக்குளித்து இறந்து போனார். இதற்கு காரணமான மேல்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். சரத்குமார் சாவுக்கு நீதி வழங்க வேண்டும். அவரின் குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ.12 லட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் தரையில் அமர்ந்துபோராட்டத்தில் ஈடுபட்டனர்

முன்னதாக காத்திருப்பு போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. ஆனாலும் திட்டமிட்டப்படி கலெக்டர் அலுவலகம் அருகே ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி கலெக்டர் அலுவலகம் அருகே 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

பேச்சுவார்த்தை

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் முக்கிய நிர்வாகிகளை வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே 15 நாட்கள் கால அவகாசம் அளிக்க வேண்டும்.

இறந்துபோன சரத்குமார் குடும்பத்துக்கு நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார். இதையடுத்து காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்