சங்ககிரி:-
காதல் மனைவி குடும்பம் நடத்த வராததால் ஆத்திரம் அடைந்தவர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு போன் செய்து மசூதி மீது பெட்ரோல் குண்டு வீசப்போவதாக மிரட்டியதால் கைது செய்யப்பட்டார்.
தொழிலாளி
சங்ககிரி அருகே தாசநாயக்கன்பாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 38). இவர், கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு பர்வீன் பானு என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பர்வீன் பானு, ராமகிருஷ்ணனை பிரிந்து சென்றார்.
அதன்பிறகு ராமகிருஷ்ணன், தன்னுடைய காதல் மனைவியை குடும்பம் நடத்த வருமாறு பலமுறை அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு பர்வீன் பானு மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.
மிரட்டல்
இதற்கிடையே நேற்றும் மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைப்பு விடுத்தார். அவர் மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரம் அடைந்த ராமகிருஷ்ணன், அவசர போலீஸ் 100 என்ற எண்ணுக்கு போன் செய்தார். எதிர் முனையில் பேசிய நபரிடம், சங்ககிரி ஆர்.எஸ். முஸ்லிம் மசூதி மீது பெட்ரோல் குண்டு வீசி மத கலவரத்தை ஏற்படுத்துவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய சங்ககிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் ராமகிருஷ்ணனை பிடித்து விசாரணை நடத்தினர்.
கைது
விசாரணையில், காதல் மனைவி குடும்பம் நடத்த வராததால் ஆத்திரம் அடைந்த ராமகிருஷ்ணன், மசூதி மீது பெட்ரோல் குண்டு வீசப்போவதாக மிரட்டியது தெரிய வந்தது.
இதுதொடர்பாக சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.