ஓட்டலில் சக தொழிலாளியை கொன்று தப்பி ஓடியவர் கைது

மார்த்தாண்டத்தில் சக தொழிலாளியை கொன்று தப்பி ஓடியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-11 18:45 GMT

குழித்துறை:

மார்த்தாண்டத்தில் சக தொழிலாளியை கொன்று தப்பி ஓடியவரை போலீசார் கைது செய்தனர்.

ஓட்டல் தொழிலாளி

குமரி மாவட்டம் தென்தாமரைகுளம் தேரிவிளையை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 50). இவர் மார்த்தாண்டம் பம்மத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே ஓட்டலில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நெட்டூரை சேர்ந்த கணேசன் (45) என்பவரும் வேலை பார்த்தார்.

நேற்று முன்தினம் மாலை ஓட்டலில் மும்முரமாக வியாபாரம் நடந்து கொண்டிருந்தது.

குத்திக்கொலை

அந்த சமயத்தில் ராதாகிருஷ்ணனுக்கும், கணேசனுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த கணேசன் ஓட்டலில் இருந்த கத்தியை எடுத்து திடீரென ராதாகிருஷ்ணனை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் அதே இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டதும் கணேசன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதுதொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிஓடிய அவரை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர்.

தப்பி ஓடியவர் கைது

இந்தநிலையில் தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை திருச்செந்தூரில் பதுங்கியிருந்த கணேசனை கைது செய்தனர். பின்னர் சக தொழிலாளியை கொன்றது ஏன்? என்பது தொடர்பாக அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட கணேசன், கொலை நடந்த ஓட்டலில் ஏற்கனவே 10 வருடங்களாக வேலை பார்த்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்து விலகி வேறு ஓட்டலுக்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இந்த ஓட்டலில் வேலைக்கு சேர்ந்துள்ளார். கொலை செய்யப்பட்டு இறந்து போன ராதாகிருஷ்ணன் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தான் இந்த ஓட்டலில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

இங்கு இருவருக்கும் இடையே வேலை விஷயமாக ஒத்துப்போகவில்லை. அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. ஆனால் நேற்று முன்தினம் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்து விட்டது. அதாவது வாக்குவாதம் முற்றிய போது ராதாகிருஷ்ணன், கணேசனை தாக்க முற்பட்டுள்ளார். அதற்குள் கணேசன், ராதாகிருஷ்ணனை கத்தியால் குத்தி கொன்று விட்டு தப்பி விட்டார். பின்னர் திருச்செந்தூர் பஸ்சில் ஏறி அவர் அங்கு சென்று பதுங்கியுள்ளார். இதனை கண்காணித்த போலீசார் அவரை கைது செய்தனர்.

இவ்வாறு கைதான கணேசன் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்