ஓசூர்:-
ஓசூர் மேம்பாலத்தில் தடுப்பு சுவரில் மோதிய லாரி மீது சொகுசு பஸ்கள் அடுத்தடுத்து மோதின. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாகனங்கள் மோதல்
கிருஷ்ணகிரியில் இருந்து நேற்று காலை பெங்களூரு நோக்கி டிப்பர் லாரி ஒன்று சென்றது. ஓசூர் பஸ் நிலையம் அருகே உள்ள மேம்பால தடுப்பு சுவர் மீது லாரி திடீரென மோதின. அந்த வழியாக வந்த சொகுசு பஸ்கள் அடுத்தடுத்து டிப்பர் லாரி மீது மோதின.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பஸ்களும், லாரியும் சேதம் அடைந்தன. ஆனால் பயணிகள் காயமின்றி தப்பினர். அந்த பஸ்கள் சாலையோரம் நிறுத்தப்பட்டன.
போக்குவரத்து பாதிப்பு
இந்த விபத்தால் ஓசூர்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், போக்குவரத்தை சரி செய்தனர். 3 பஸ்களிலும் வந்த பயணிகளை மாற்று பஸ்கள் மூலமாக பெங்களூருக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கிய சொகுசு பஸ்கள், பொக்லைன் எந்திரம் மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. விபத்து குறித்து டிப்பர் லாரி டிரைவரிடம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.