பிறந்த குழந்தையின் உடலை புதைத்துவிட்டு நாடகமாடிய சிறுமி

பிறந்த குழந்தையின் உடலை புதைத்துவிட்டு சிறுமி நாடகமாடினார்.

Update: 2023-09-08 19:17 GMT

மீன்சுருட்டி:

திருமணத்திற்கு முன் கர்ப்பம்

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியை சேர்ந்த 21 வயது வாலிபரும், 18 வயது சிறுமியும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர்களுக்கு வருகிற தை மாதம் திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அந்த வாலிபருடன் நெருங்கி பழகியதில், அந்த சிறுமி கர்ப்பமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 5-ந்தேதி மாலை அந்த சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு மருந்து கடையில் வயிறு வலிப்பதாக கூறி, ஊசி போட்டுக்கொண்டதாக தெரிகிறது. பின்னர் நள்ளிரவில் அந்த சிறுமி இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அங்கு அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

உடல் புதைப்பு

குழந்தை பிறந்தது வெளியே தெரிந்தால், தன்னை தவறாக நினைப்பார்கள் என்று அந்த சிறுமி கருதியதாக தெரிகிறது. மேலும் குழந்தை பிறந்தபோதே இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் குழந்தையில் உடலை கழிவறைக்கு பின்புறம் உள்ள குப்பைக்குழியில் புதைத்து விட்டு, பின்னர் வீட்டிற்கு வந்து தூங்கியுள்ளார். அதிகாலையில் அவருக்கு வயிற்று வலி அதிகமானதால், அவரது உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக மீன்சுருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

அங்கும் அந்த சிறுமி தனக்கு வயிறு வலிப்பதாக மட்டும் கூறியுள்ளார். இதையடுத்து டாக்டர் அவரை பரிசோதனை செய்து, விசாரித்ததில் அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்தது தெரியவந்தது. மேலும் நடந்த சம்பவம் குறித்து சிறுமி கூறியதை கேட்டு, அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கைது

பின்னர் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து குழந்தையின் உடலை மீட்டு மீன்சுருட்டி மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் செல்வராசு கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்குப்பதிவு செய்து, குழந்தையின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். அந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இது குறித்து அந்த வாலிபர் மற்றும் சிறுமி மீது வழக்குப்பதிவு செய்து, அந்த வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்