கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்டவர் கொலை: தாய்-மகனுக்கு விதித்த ஆயுள்தண்டனை உறுதி
கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்டவரை எரித்துக்கொன்ற வழக்கில் தாய்-மகனுக்கு தூத்துக்குடி மாவட்ட கோர்ட்டு விதித்த ஆயுள்தண்டனையை மதுரை ஐகோர்ட்டு உறுதி செய்தது.
மதுரை,
கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்டவரை எரித்துக்கொன்ற வழக்கில் தாய்-மகனுக்கு தூத்துக்குடி மாவட்ட கோர்ட்டு விதித்த ஆயுள்தண்டனையை மதுரை ஐகோர்ட்டு உறுதி செய்தது.
கணவர் எரித்துக்கொலை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதை சண்முகம் கண்டித்துள்ளார்.
இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது. இந்தநிலையில் முருகேசன், அவருடைய தாயார் செல்வி ஆகியோர் 23.1.2017 அன்று நள்ளிரவு 11.30 மணி அளவில் சண்முகம் வீட்டிற்குள் நுழைந்தனர். அங்கிருந்த சண்முகம் மீது மண்எண்ணெயை ஊற்றி தீவைத்தனர். இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து, முருகேசன், செல்வி ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட கோர்ட்டு, அவர்கள் இருவருக்கும் தலா இரட்டை ஆயுள்தண்டனை விதித்து 2019-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
ஆயுள்தண்டனைக்கு எதிராக மனு
இந்த தண்டனையை எதிர்த்து அவர்கள் இருவரும் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை நீதிபதிகள் நிஷாபானு, ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது அரசு வக்கீல் திருவடிகுமார் ஆஜராகி, மனுதாரர்கள் இருவரும், சண்முகத்தின் வீட்டிற்குள் சென்று அவர் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர். பின்னர் அங்கிருந்து வெளியே ஓடிவந்ததை அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர். எனவே திட்டமிட்டு சண்முகத்தை மனுதாரர்கள் கொலை செய்துள்ளனர். அவர்களுக்கான தண்டனையை உறுதி செய்தும், இந்த மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.
தண்டனை உறுதி
விசாரணை முடிவில், மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுகள் போதுமான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனவே அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
முருகேசன் தற்போது சிறையில் உள்ளார். ஆனால் செல்வியின் தண்டனையை நிறுத்தி வைத்திருந்ததால் அவர் வெளியில் உள்ளார். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.