ஆட்டை அடித்துக் கொன்ற சிறுத்தை
புளியரையில் ஆட்டை, சிறுத்தை அடித்துக் கொன்றது.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே புளியரை மடத்தரை பாறை அருகே உள்வாய்தரத்து களம் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளத்தாய். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் ஆடு, மாடுகளை தொழுவத்தில் அடைத்துவிட்டு வீட்டில் வெள்ளத்தாய் தூங்கச் சென்றார்.
காலையில் எழுந்து பார்த்த போது தொழுவத்தில் இருந்த ஒரு ஆட்டை காணவில்லை. இதையடுத்து அப்பகுதியில் தேடி பார்த்த போது, சிறிது தூரத்தில் வனப்பகுதியில் ஆடு காயங்களுடன் இறந்து கிடந்தது. இதைப்பார்த்த வெள்ளத்தாய் சிறுத்தை தான் ஆட்டை அடித்துக் கொன்று இருக்கலாம் என்று புளியரை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, சிறுத்தையின் கால்தடங்கள் பதிந்து இருந்தது தெரியவந்தது. எனவே வனப்பகுதியில் இருந்த வந்த சிறுத்தை தான் ஆட்டை அடித்துக் கொன்று இருப்பது உறுதியானது. சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.