மறுக்கப்படும் உரிமைகளை சட்டத்தின் மூலம் பெண்கள் பெறுவதற்கு சட்டப்பணிகள் குழு உறுதுணையாக இருக்கும்; நீதிபதி பேச்சு

மறுக்கப்படும் உரிமைகளை சட்டத்தின் மூலம் பெண்கள் பெறுவதற்கு சட்டப்பணிகள் குழு உறுதுணையாக இருக்கும் என்று நீதிபதி கூறினார்.

Update: 2023-03-03 19:05 GMT

ஜெயங்கொண்டம்:

சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் தேசிய மகளிர் ஆணையம் சார்பில் அதிகாரமளித்தல் என்ற பெண்களுக்கான சிறப்பு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் சார்பு நீதிபதியும், வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவருமான லதா தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதித்துறை நடுவர் ராஜசேகரன் மற்றும் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வழக்கறிஞர்கள் சங்க தலைவர் அன்புமொழி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக அரியலூர் மாவட்ட போலீஸ் அலுவலக சட்ட ஆலோசகர் பகுத்தறிவாளன், வக்கீல்கள் அல்லி, கோமதி, டாக்டர் பரமேஸ்வரி ஆனந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சவால்களை எதிர்கொள்ள...

பெண்களுக்கான சட்டங்கள் மற்றும் சட்டப்பணிகள் குழுவின் திட்டங்கள் அடங்கிய நூலை வெளியிட்டு, சார்பு நீதிபதி லதா ேபசினார். அவர் பேசுகையில், பல்வேறு சட்டங்கள் வழங்கும் உரிமைகள் மற்றும் தீர்வுகள் குறித்த நடைமுறை அறிவை வழங்கி, நிஜ வாழ்வின் சவால்களை பெண்கள் எதிர்கொள்ள செய்வதே இந்த இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும்போது, சட்டத்தின் மூலம் அதை மீண்டும் பெறுவதற்கு, சட்டப்பணிகள் குழு எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். நீங்கள் தெரிந்து கொண்ட சட்டங்களை பற்றி மற்ற பெண்களுக்கு எடுத்துக் கூறி அதன் மூலம் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், என்றார்.

நிகழ்ச்சியில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வட்ட சட்டப்பணிகள் குழுவின் நிர்வாக உதவியாளர் லெபர்ன் வசந்த ஹாசன் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்