முந்திாி தோப்புகள் ஏலம் விடும் பிரச்சினை தீர்க்கப்படும்

விருத்தாசலம் வனத்தோட்ட கழகம் சாா்பில் முந்திரி தோப்புகள் ஏலம் விடும் பிரச்சினை குறித்து பேச்சுவாா்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

Update: 2023-09-12 18:45 GMT

விருத்தாசலம்

அமைச்சர் ஆய்வு

விருத்தாசலம் வனத்தோட்ட கழகம் சார்பில் விருத்தாசலத்தை அடுத்த நறுமணம் கிராமத்தில் 69 ஹெக்டேர் நிலப்பரப்பில் முந்திரிக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2021-2022-ம் ஆண்டில் 34 ஏக்கரில் வி.ஆர்.ஐ.-3 என்ற வகை முந்திரி கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது 3-ம் ஆண்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பணிகள் தரமாக நடைபெறுகிறதா?, முந்திரிக் கன்றுகளின் ஆயுட்காலம், அறுவடை காலம், மகசூல் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர் அப்பகுதிசெம்மண் பகுதியாக இருந்ததால் மண்ணை கையில் எடுத்து இது எந்த வகை மண், இந்த மண்ணில் எந்தெந்த வகை பயிர்கள் வளரும் எனவும் கேட்டறிந்தார்.

முந்திரிதோப்பு ஏலம்

அப்போது அங்கிருந்த விவசாயிகள், விருத்தாசலம் வனத்தோட்ட கழகம் சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நடைபெற்று வந்த முந்திரி தோப்புகள் ஏலம் விடுதல் தற்போது அக்டோபர் மாதம் விடப்படுகிறது. இதனால் ஏலம் எடுப்பதற்காக விவசாயிகள் லட்சக்கணக்கில் முன் தொகையை கட்டி விட்டு மகசூலுக்காக 4 மாதங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் கட்டிய முன் தொகை பணத்துக்கு அதிக வட்டி கட்ட வேண்டியுள்ளது. இதனால் கடந்த 4 ஆண்டுகளாக விவசாயிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

எனவே விவசாயிகளின் நலன் கருதி டிசம்பர் மாத இறுதி அல்லது ஜனவரி மாதம் முன்பகுதியில் ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கூறினால் அவர்கள் மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக புகார் தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தை நடத்தி

இதைக் கேட்டறிந்த அமைச்சர் மதிவேந்தன், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இந்த பிரச்சினை தொடர்பாக விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்த ஆய்வின்போது வனத்தோட்ட கழக நிர்வாக இயக்குனர் யோகேஷ் சிங், விருத்தாசலம் மண்டல மேலாளர் ராஜேஷ், விருத்தாசலம் வனச்சரகர் ஏழுமலை, வனவர்கள் சுந்தரேசன், சுரேஷ், வனக்காப்பாளர் குமார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

முன்னதாக தி.மு.க. விருத்தாசலம் தெற்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன், கம்மாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கோட்டேரி சுரேஷ், கம்மாபுரம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஆசைதம்பி, கழுதூர் வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் தாளாளர் வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் சிவ கண்டன், மாவட்ட பிரதிநிதி ஆட்டோ பாண்டியன், கம்மாபுரம் ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் அருண் பிரபாகரன், வெங்கடேசன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் அமைச்சர் மதிவேந்தனுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்