இடைக்கால பட்ஜெட் பத்து ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை பிரதிபலிக்கிறது - வைகோ

தமிழ்நாட்டின் ரெயில்வே திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல், அவை கிடப்பில் போடப்பட்டுள்ளன என்று வைகோ கூறியுள்ளார்.

Update: 2024-02-01 10:21 GMT

சென்னை,

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2024 -25-ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால வரவு - செலவு திட்ட அறிக்கையில், பொருளாதார வளர்ச்சி 7.5 விழுக்காடாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா காலகட்டத்திற்கு பின்பு கடந்த நான்கு ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சி என்பது 7 விழுக்காடு அளவை தொடவில்லை.

நாட்டின் ஒட்டுமொத்த கடன் 14.13 லட்சம் கோடி ரூபாய் அளவில் இருக்கும்போது மேலும் பொது சந்தையில் 11.75 லட்சம் கோடி நிதி கடனாக திரட்டப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக பணவீக்க விகிதம் குறையவில்லை. 2023 நவம்பரில் சில்லறை பண வீக்கம் 5.55 விழுக்காடு ஆக இருந்தது டிசம்பர் மாதம் 5.69 விழுக்காடு அளவாக உயர்ந்திருக்கிறது. இதனால் விலைவாசி கடுமையாக அதிகரித்து வருகிறது.

பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்தபோதிலும் பெட்ரோல் டீசல் மீதான வரிகளை இந்திய அரசு குறைக்கவில்லை. இதுவும் விலைவாசி ஏற்றத்திற்கு அடிப்படை காரணிகளில் ஒன்றாக இருக்கிறது. ஏழைகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் நலனில் அக்கறை கொண்டு நிதிநிலை அறிக்கையில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டதாக நிதி மந்திரி தெரிவித்திருக்கிறார். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாஜக அரசின் வாக்குறுதிப்படி ஆண்டுக்கு ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிட்டவில்லை!

2022-23 காலகட்டத்தில் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை 3.2 விழுக்காடு அளவாக இருந்தாலும், வேலை வாய்ப்பைப் பெறுவதில் நாடு முழுவதும் சமமற்ற தன்மையே நீடிக்கிறது. உலகின் வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது என்று மத்திய அரசு கூறினாலும், அதற்கு ஏற்ப வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை.

நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் வேளாண்மைத் துறையின் பங்கு குறைந்து வருகிறது. வேளாண் துறையின் உற்பத்தி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. விவசாயிகளின் வருவாய் மூன்று மடங்கு அதிகரிக்கப்படும் என்ற கடந்த கால அறிவிப்புகள் கானல் நீரானது என்பதே உண்மை ஆகும். 2014-ம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த போது, விவசாய விளைபொருட்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரை அடிப்படையில் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும் என்ற அறிவிப்பு நடைமுறைப் படுத்தப்படவில்லை.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்திற்கான நிதி குறைக்கப்பட்டது மட்டுமின்றி, ஆதார் இணைப்பு இல்லை என்று 11 கோடி ஏழை மக்களை பயனாளிகள் பட்டியலிலிருந்து மத்திய அரசு நீக்கி இருக்கிறது. பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் ஏழை நடுத்தர மக்களுக்கு சென்றடையவில்லை. மாறாக கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் பலன் அடைந்திருக்கின்றன. இந்த நிதிநிலை அறிக்கையிலும் கார்ப்பரேட் வரி 22 விழுக்காடாக குறைக்கப்பட்டு இருக்கிறது.

உற்பத்தி தொழில் துறை வளர்ச்சி பின்தங்கி இருக்கிறது. வேளாண் துறைக்கு அடுத்து அதிக அளவில் வேலை வாய்ப்புகளை வழங்கும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒட்டுமொத்த உற்பத்தியில் 49 விழுக்காடு பங்களிப்பை வழங்குகின்றன. ஆனால் அவை சந்திக்கும் நெருக்கடிகளை தீர்ப்பதற்கு மத்திய பாஜக அரசு முன் வரவில்லை. ஜி.எஸ்.டி. வரி வருவாயில் தமிழ்நாடு உள்ளிட்ட வளர்ச்சி பெற்ற மாநிலங்களுக்கு உரிய விகிதாச்சார நிதிப் பகிர்வு அளிக்கப்படாமல், மாநிலங்களுக்கு 75 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி இல்லா கடன் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது, மாநில அரசுகளுக்கு நிதிச் சுமையை தான் ஏற்படுத்தும்.

பத்தாண்டுகளில் 19 எய்ம்ஸ் மருத்துவமனைகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று அறிவித்துள்ள நிதி மந்திரி, தமிழ்நாட்டில் மதுரையில் பிரதமர் அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி மூச்சு விடவில்லை.

தமிழ்நாட்டின் ரெயில்வே திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல், அவை கிடப்பில் போடப்பட்டுள்ளன. 40,000 சாதாரண ரெயில் பெட்டிகள் வந்தே பாரத் ரெயில் பெட்டிகளை போல தரம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பின் மூலம் ரயில்வே கட்டணங்கள் உயர்வதை மறைமுகமாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இதனால் ரெயில் போக்குவரத்தை நம்பியுள்ள சாதாரண ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

புத்தாக்க ஆராய்ச்சி திட்டங்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் கோடி ஒதுக்கீடு, பெண்களின் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்க தடுப்பூசி திட்டம், சூரிய ஒளி மின்சார கட்டமைப்பு அமைக்கும் குடியிருப்புகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவையாக இருந்தாலும் ஒட்டுமொத்தமாக இடைக்கால நிதிநிலை அறிக்கை பத்தாண்டு கால பா.ஜ.க. அரசின் தோல்வியை பிரதிபலிப்பதாகத்தான் இருக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்