கை, கால்களை கட்டிப்போட்டு பெண்ணை கொடூரமாக கொன்ற கணவர்

தென்காசியில் பூட்டிய வீட்டில் கை, கால்களை கட்டிப்போட்டு பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக அவரது கணவரை போலீசார் தேடி வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2023-06-22 18:45 GMT

தென்காசி நடுமாதாங்கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரன். இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்துள்ளார். இவரது மனைவி சித்ரா (வயது 50), பீடி சுற்றும் தொழிலாளி. இவரது வீடு கடந்த 2 நாட்களாக பூட்டிக்கிடந்தது. இந்த நிலையில் சித்ராவின் தம்பி குற்றாலநாதன் நேற்று காைலயில் சந்திரனின் செல்போனை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, அவர் தனது அக்கா குறித்து கேட்டார். அதற்கு சித்ராவுக்கு உடல்நிலை சரிஇல்லை. இதனால் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து இருப்பதாகவும், நானும் அங்கேயே இருப்பதாகவும் கூறி போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

வீட்டில் துர்நாற்றம்

ெதாடர்ந்து அவருக்கு தொடர்பு கொண்டபோது போன் சுவிட்ச்-ஆப் செய்துவிட்டார். இதனால் சந்தேகம் அடைந்த குற்றாலநாதன் தனது அக்கா சித்ராவை தேடி வீட்டிற்கு சென்றார்.

அப்போது, கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. மேலும் வீட்டில் இருந்து துர்நாற்றமும் வீசியது. உடனே குற்றாலநாதன் இதுகுறித்து தென்காசி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணம்

தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டு நாக சங்கர், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் பூட்டை உடைத்து வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது, அங்கு கட்டிலில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சித்ரா பிணமாக கிடந்தார். அவரது முகமும் சிதைக்கப்பட்டு இருந்தது.

பின்னர் போலீசார் சித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொடூரக்கொலை

தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் கணவன்-மனைவி இடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரம் அடைந்த சந்திரன் தனது மனைவி சித்ராவின் முகத்தை துணியால் மூடி சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்த அவரை கட்டிலில் படுக்க வைத்து கை, கால்களை கயிற்றால் கட்டி துணியால் முகத்தை அமுக்கியுள்ளார். அந்த சம்பவத்தில் சித்ரா பரிதாபமாக இறந்தார். மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு சந்திரன் அங்கிருந்து தப்பிச் சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

எனினும் தப்பி ஓடிய சந்திரன் பிடிபட்ட பின்னரே கொலைக்கான முழு காரணமும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

வலைவீச்சு

இதுதொடர்பாக தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்திரனை வலைவீசி தேடி வருகிறார்கள்.

பூட்டிய வீட்டில் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்