உண்ணாவிரத போராட்டம் தொடரும் - இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு

போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்தார்.

Update: 2024-02-28 19:16 GMT

கோப்புப்படம்

சென்னை,

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 19-ந்தேதி முதல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தை (டி.பி.ஐ. வளாகம்) முற்றுகையிடும் போராட்டத்தையும், மாவட்ட தலைநகரங்களில் போராட்டத்தையும் முன்னெடுத்தும், போலீசாரால் கைது செய்யப்பட்டும் வருகின்றனர்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பான விரிவான அறிக்கையை பெற்று முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றும், ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில்கொண்டு, போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்தார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வைத்த வேண்டுகோளை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் நிராகரித்ததோடு, அதுதொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு உள்ளனர். அந்த அறிக்கையில் இடைநிலை ஆசிரியர் பதிவு மூப்பு இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராபர்ட் கூறியிருப்பதாவது:-

ஆசிரியர்களின் மீது பாசத்துடன் இருக்கும் எங்கள் அமைச்சர், சொன்னதை நிறைவேற்றக்கோரி 10 நாட்களாக போராடி வரும் எங்களை அழைத்து கூட பேச மனம் இல்லாமல் இருக்கிறார். போலீசாரை கொண்டு எங்களை கைது செய்கின்றனர். இதனால் எங்களுக்கு மனம் வேதனை அளிக்கிறது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் கொடுத்த இடைநிலை ஆசிரியர்களின் சமவேலைக்கு சம ஊதியம் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது என்ற ஒரு நல்ல செய்தியை அறிவிப்பார் என்ற நம்பிக்கையோடு எதிர்பார்த்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் காத்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்