கலெக்டர் அலுவலகத்தில் விடுதி வார்டன் தீக்குளிக்க முயற்சி
உணவு செலவின தொகையை வழங்காததால் ஆத்திரம் அடைந்த விடுதி வார்டன் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விடுதி மாணவர்களுக்கு உணவு
அரியலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு என 17 மிகப்பிற்படுத்தப்பட்ட விடுதிகள், 15 பிற்படுத்தப்பட்ட விடுதிகள் என மொத்தம் உள்ள 32 விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் அனைத்து விடுதி மாணவ-மாணவிகளுக்கும் உணவும், தங்கும் வசதியும் இலவசமாக அளிக்கப்படும். இந்த நிலையில் விடுதி மாணவ-மாணவிகளுக்கான காய்கறி, அசைவம், முட்டை உள்ளிட்டவற்றுக்கான செலவு தொகை அரசு சார்பில் ஒவ்வொரு மாதமும் விடுதி வார்டன்களுக்கு கொடுக்கப்படும். ஆனால் கடந்த 7 மாதங்களாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 32 விடுதி வார்டன்களுக்கும் இந்த தொகை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர்கள் தங்களின் சொந்த பணத்தையும், வட்டிக்கு வாங்கியும் விடுதி மாணவர்களுக்கு உணவு சமைத்து வழங்குகின்றனர்.
அரசிடம் இருந்து விடுதி மாணவர்களுக்கான உணவு தொகை வழங்காதது குறித்து விடுதி வார்டன்கள் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு, தலைமை செயலாளர், கலெக்டர் உள்ளிட்டவர்களுக்கு பலமுறை மனு அளித்துள்ளனர்.
தீக்குளிக்க முயற்சி
ஆனால் அதுகுறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விடுதி வார்டன்கள் நேற்று அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட சென்றனர். அப்போது அவர்கள் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில், இதுவரை சுமார் ரூ.77 லட்சம் உணவு தொகை வழங்கப்படாமல் உள்ளது. இதனால் எங்களால் விடுதியை நடத்த முடியவில்லை. எனவே நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.இதையடுத்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை விடுதி வார்டன்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து செல்ல முயன்றனர். அப்போது அங்கு வந்திருந்த செந்துறை பிற்படுத்தப்பட்டோர் விடுதி வார்டன் செல்வராஜ் திடீரென தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
பணியிடை நீக்கம்
அப்போது அவரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி, அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து செல்வராஜிடம் கேட்டபோது அவர் கூறுகையில், நான் பணியாற்றிய விடுதியில் கடந்த மாதம் அதிகாரிகள் ஆய்வுக்கு வந்தனர். அப்போது என்னிடம் போதிய பணம் இல்லாததால் காய்கறி உணவு வழங்கவில்லை. மாணவர்களுக்கு ஏன் காய்கறி உணவு வழங்கவில்லை என கேட்டு என்னை பணியிடை நீக்கம் செய்தனர். தற்போது நான் பணியிடை நீக்கத்தில் உள்ளேன். அரசு வழங்கும் தொகையை மாதந்தோறும் முறையாக வழங்கியிருந்திருந்தால் இந்த நிலை எனக்கு ஏற்பட்டு இருக்காது என்றார்.
குற்றச்சாட்டு
தொடர்ந்து விடுதி வார்டன்கள் தெரிவிக்கையில், 2 நாட்களுக்குள் 7 மாதத்திற்கான செலவின நிலுவை தொகையை வழங்காவிட்டால் அத்தொகை மீண்டும் அரசின் கஜானாவிற்கு சென்று விடும். இதனால் தாங்கள் கடன் வாங்கி செலவு செய்த தொகையை எங்களால் பெற முடியாத சூழல் ஏற்படும். இதற்கு சம்பந்தப்பட்ட துறை மாவட்ட கண்காணிப்பாளர் தான் காரணம் என குற்றம் சாட்டினர். மேலும் மாணவர்களுக்கான உணவு செலவின தொகையை வழங்காவிட்டால் இனி மாணவர்களுக்கு உணவு வழங்க இயலாது. அதனால் மாணவர்கள் கல்வி பாதிக்கப்படுவதுடன், எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக மாணவர்கள் நலன் கருதி உணவு செலவின தொகையை வழங்க வேண்டும் என்றனர்.