குதிரை பொம்மைகளுடன் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் ஆழித்தேர்

தேரோட்டத்துக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் ஆழித்தேர், குதிரை பொம்மைகளுடன் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. அழகாக காட்சி அளிக்கும் ஆழித்தேரை பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Update: 2023-03-29 18:45 GMT


தேரோட்டத்துக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் ஆழித்தேர், குதிரை பொம்மைகளுடன் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. அழகாக காட்சி அளிக்கும் ஆழித்தேரை பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

உற்சவம்-சாமி வீதிஉலா

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்புமிக்க இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான ஆழித்தேரோட்டம் வருகிற 1-ந்தே்தி(சனிக்கிழமை) நடக்கிறது. இந்த நிலையில் பங்குனி உத்திர பெருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் உற்சவம், சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.

தேரை அழகுபடுத்தும் பணி

தேரோட்டத்திற்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் சிறிய தேர் முதல் பெரிய தேர் வரை அனைத்து தேர்களுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேரின் கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் தற்போது தேரை அழகுபடுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பெல் நிறுவனம் சார்பில் அனைத்து தேரின் சக்கரங்களையும் கழற்றி பிரேக் சரிபார்க்கும் பணி, தேருக்கு வடம் பொருத்தும் பணிகள், அலங்கார பொம்மைகள் பொறுத்தும் பணிகள், வாசகால் அமைக்கும் பணி, கம்மாளம் பொருத்தும் பணி, அலங்கார படங்கள் அமைக்கும் பணிகள் நடந்தது. தற்போது 5 தேர்களும் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. நேற்று தேருக்கு திரை சீலைகள் பொருத்தி, கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை பொருத்தினர்.

கண்கொள்ளா காட்சி

நேற்று முன்தினம் இரவு தேருக்கு குதிரை ெபாம்மைகள் பொறுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து நேற்று ஓட்டத்திற்கு தயாரான குதிரை பொம்மைகளுடன் அலங்கரிக்கப்பட்ட தேரை, பக்தர்கள், சுற்றுலா பயணிகள் புகைப்படங்கள் எடுத்தும் மற்றும் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், ஆசியாவிலேயே பெரிய தேரான ஆழித்தேர் ஆடி அசைந்து வருவதை காண கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அப்படிபட்ட தேரை தேரோட்டத்தின் அன்று அருகில் இருந்து பார்ப்பது என்பது குறைவு. தற்போது தேரோட்டத்திற்கான எல்லா பணிகளும் முடிந்து ஓட்டத்திற்கு தயாராகி விட்டது.

சிறப்பாக நடக்கும்

விரைவில் தேரோட்டத்தை காண காத்திருக்கிறோம். மேலும் பங்குனி உத்திர விழாவையொட்டி கோவிலின் அருகில் ராட்டினங்கள், சிறிய ரெயில், டிராகன் ராட்டினங்கள் ஆகியவற்றை முன்கூட்டியே கொண்டுவந்து தயாராக வைத்துள்ளனர். இந்த ஆண்டு தேரோட்டம் சிறப்பாக, நல்ல முறையில் நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்