பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மலைவாழ் மக்கள் போராட்டம்

பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.;

Update:2023-10-10 00:15 IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் 171 மலை கிராமங்களும், 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்களும் வசித்து வருகிறார்கள். இங்கு 44 பெரிய மலைக்கிராமங்களும், 150-க்கும் மேற்பட்ட சிறிய கிராமங்களும் உள்ளன. இங்குள்ள மலைவாழ் மக்களுக்கு 1979-ம் ஆண்டு நில அளவை செய்து வருவாய்த்துறை பட்டா வழங்கியது. மலைவாழ் மக்கள் தாங்கள் விவசாயம் செய்யும் நிலத்தினை காடு என்று அழைப்பார்கள்.

இந்த நில அளவையின்போது நில அளவை துறையினர் காடு என்பதை வனக்காடு எனக்கருதி மலைவாழ் மக்கள் பயன்பாட்டில் உள்ள 12 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பகுதிகளை காடு புறம்போக்கு என வகைப்படுத்தி அந்த பகுதி, வனத்துறைக்கு சொந்தமானது என கருதினர். மேலும் அந்த நிலத்தில் விவசாயம் செய்யும் மலைவாழ் மக்கள் மீது வனத்துறையினர் நடவடிக்கையும் எடுத்து வந்தனர்.

பட்டா வழங்க உத்தரவு

இந்த நிலையில் காடு புறம்போக்கு என்ற வகைப்பாட்டில் உள்ள நிலங்களை முறையாக நில அளவை செய்து பட்டா வழங்கக்கோரி தமிழ்நாடு மலைவாழ் மலையாளி பேரவை சங்கத்தினர் கடந்த 2018-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தனிதாசில்தார் ஒருவரை நியமித்து கல்வராயன்மலை முழுவதும் நில அளவீடு செய்து மலைவாழ் மக்களின் உரிமைகள் பாதிக்காத வகையில் அவர்கள் பயன்படுத்தி வரும் நிலங்களுக்கு வருவாய்த்துறையினர் மூலம் பட்டா வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். சென்னை ஐகோா்ட்டு உத்தரவிட்டு 6 மாதங்கள் கடந்தும் இதுவரை மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்க வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த கல்வராயன்மலையை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மலையாளி பேரவை சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் பாக்யராஜ் தலைமையில், மாநில தலைவர் வரதராஜூ, மாநில பொதுச்செயலாளர் மோகன், மாநில பொருளாளர் ராஜேஷ், மாநில துணைத்தலைவர் ராமசாமி மற்றும் நிர்வாகிகள் நேற்று காலை கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

தொடர்ந்து அவர்கள் அலுவலக நுழைவு வாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டும் இதுவரை பட்டா வழங்காததை கண்டித்தும், மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமங்களை கல்வராயன்மலை வருவாய் வட்டத்தில் சேர்க்க வலியுறுத்தியும், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடுப்பு அமைத்து அவர்களை கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்லாதவாறு தடுத்தனர். மேலும் ஆத்திரம் தீராத மலைவாழ் மக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

கலெக்டரிடம் மனு

இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் முக்கிய நிர்வாகிகளை கலெக்டரை சந்திக்க அனுமதித்தனர்.

இதையடுத்து மலைவாழ் மக்கள் மற்றும் மலைவாழ் மலையாளி பேரவை சங்கத்தினர் கலெக்டா் ஷ்ரவன்குமாரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதை பெற்றுக்கொண்ட கலெக்டர், கோரிக்கை மனுவை அரசுக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

இருப்பினும் மலைவாழ் மக்களின் இந்த போராட்டத்தால் கலெக்டர் அலுவலகம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்