பிரதமர் மோடி எழுதிய 'தேர்வு போராளிகள்' புத்தகத்தின் தமிழ் பதிப்பு கவர்னர் வெளியிட்டார்

பிரதமர் மோடி எழுதிய ‘தேர்வு போராளிகள்' புத்தகத்தின் தமிழ் பதிப்பு கவர்னர் வெளியிட்டார்.

Update: 2023-01-17 18:43 GMT

சென்னை,

மாணவர்கள் தேர்வுக்கு எப்படி தயாராகவேண்டும்? என்பது தொடர்பாக உயரிய ஆலோசனைகளை தெரிவிக்கும் வகையில் 'தேர்வு போராளிகள்' என்ற புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி எழுதினார். மத்திய கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்பேரில் இந்த புத்தகத்தை தமிழ் உள்பட 11 மொழிகளில் தேசிய புத்தக அறக்கட்டளை மொழி பெயர்த்து வெளியிட்டது.

அந்தவகையில், 'தேர்வு போராளிகள்' புத்தகத்தின் தமிழ் பதிப்பினை சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று வெளியிட்டார். அதன் முதல் பிரதியை, சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் பேராசிரியர் காமகோடி பெற்றுக்கொண்டார். 2-வது பிரதியை சென்னை கேந்திரிய வித்யாலய சங்காதன் அமைப்பின் துணை கமிஷனர் ருக்மிணி பெற்றார்.

இதையடுத்து, 'தேர்வு போராளிகள்' புத்தகத்தின் தமிழ் பதிப்பு புத்தகத்தை, பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் மாணவர்களுக்கு, கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கி பேசினார். அப்போது, ''மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டு, திறமைகளை மேம்படுத்தி சாதனைகளை படைக்கவேண்டும். நமது நாடு அதன் புகழ்பெற்ற கடந்த காலத்தை மீட்டெடுப்பதை உறுதி செய்வதற்கும், 2047-ம் ஆண்டில் இந்தியா உலக தலைவராகுவதற்கும் மாணவர்கள், இளைஞர்களின் துடிப்பான பங்களிப்பு அவசியம் ஆகும்'' என்று குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்