சட்டசபையில் பேசியது என்ன..? வீடியோவை வெளியிட்ட கவர்னர் ஆர்.என்.ரவி

சட்டசபையில் ஓரிரு நிமிடங்கள் உரையாற்றிய வீடியோவை சப்-டைட்டில் உடன் கவர்னர் ஆர்.என்.ரவி பகிர்ந்துள்ளார்.

Update: 2024-02-12 12:47 GMT

சென்னை,

2024ம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், கவர்னர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. அவைக்கு கவர்னர் ஆர்.என். ரவி, 10 மணிக்கு வந்தடைந்தார். தமிழ்த் தாய் வாழ்த்துடன் சட்டசபை துவங்கியது.

இதற்குப் பிறகு கவர்னர் உரையை வாசிக்க ஆரம்பித்த கவர்னர் ஆர்.என். ரவி, சட்டசபை துவங்கும் முன்பாகவும் முடியும்போது தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்ற தனது வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டு, தேசிய கீதத்திற்கு போதிய மரியாதை தரப்படவில்லையென்று குறிப்பிட்டார். மேலும், கவர்னர் உரையில் தகவல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் தன்னால் ஏற்க முடியாத பகுதிகள் இடம்பெற்றிருக்கின்றன என்றும் அவற்றை வாசிப்பது அரசியல் சாசனத்தை அவமதிப்பதாக அமையும் என்று கூறிவிட்டு, உரையை வாசிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி அமர்ந்தார்.

இதையடுத்து, கவர்னர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அந்த உரையை வாசித்து முடித்த பிறகு பேசிய சபாநாயகர் அப்பாவு, சில கருத்துகளை முன்வைத்தார். "கவர்னர் குறைவாக வாசித்ததை நான் குறையாகச் சொல்லவில்லை. அதற்குப் பிறகு, ஜனகனமன வாசித்திருக்க வேண்டும் என்பதை ஒரு கருத்தாகச் சொன்னார்கள். எல்லோருக்கும் கருத்துகள் இருக்கும். இவ்வளவு பெரிய மழை, வெள்ளம் வந்த பிறகும் ஒரு பைசாகூட நிதி தரவில்லை.

பல லட்சம் கோடி ரூபாய் பி.எம். கேர் நிதியில் உள்ளது. அதற்குக் கணக்குக்கூட கிடையாது. அதிலிருந்து ஒரு 50,000 கோடி ரூபாயை வாங்கித் தந்தால் நன்றாக இருக்குமே என நான் கூட கேட்க முடியும். சாவர்க்கர் வழியில் வந்தவர்களுக்கும், கோட்சே வழியில் வந்தவர்களுக்கும் சற்றும் குறைந்ததல்ல தமிழ்நாட்டு சட்டமன்றம்" என்று கூறினார்.

சபாநாயகர் அப்பாவு இதனை சொல்லி முடித்ததும், கவர்னர் ஆர்.என். ரவி அவையிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில் தமிழ்நாடு சட்டசபையில் தான் பேசிய உரையின் வீடியோவை கவர்னர் ஆர்.என்.ரவி கவர்னர் மாளிகையின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். 



Tags:    

மேலும் செய்திகள்