பெரியாரின் பெருந்தொண்டர் ஆனைமுத்து நூற்றாண்டை அரசே கொண்டாட வேண்டும் - ராமதாஸ்

27% இட ஒதுக்கீட்டுக்காக ஆனைமுத்து நடத்திய போராட்டங்களை பள்ளிகளுக்கான பாட நூலில் ஒரு பாடமாக சேர்க்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Update: 2024-06-21 09:06 GMT

சென்னை,

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சமூகநீதிக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்டவரும், மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவருமான பெரியவர் வே. ஆனைமுத்து அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு இன்று தொடங்குகிறது. பெரியாரின் சுயமரியாதை கொள்கைகளை பரப்புவதற்காகவும், சமூக நீதியை வென்றெடுப்பதற்காகவும் அவர் ஆற்றிய அரும்பணிகளை இந்த நாளில் நான் நினைவு கூர்கிறேன்.

தமிழ்நாட்டில் அனைத்து சாதியினருக்கும் அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வென்றெடுத்துக் கொடுப்பதற்கான போராட்டங்களை இன்னும் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லவும் இந்த நாளில் நான் உறுதியேற்றுக் கொள்கிறேன்.

பள்ளிப்படிப்பை படிக்கும் போதே தந்தை பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, கல்லூரி காலத்தில் தந்தை பெரியாருடன் இணைந்து செயல்பட்டவரான ஆனைமுத்து சமூகத்திற்காகவும், சமூகநீதிக்காகவும் ஆற்றிய பணிகள் எண்ணற்றவை. ஆனால், சமூகத்திற்காக அவர் உழைத்த அளவுக்கு சமூகம் அவரை அங்கீகரிக்கவில்லை. பெரியவர் ஆனைமுத்து அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு தொடங்கியுள்ள நிலையில், இன்று தொடங்கி ஓராண்டிற்கு அவரது நூற்றாண்டு விழாவை மாவட்டங்கள் தோறும் தமிழக அரசே கொண்டாட வேண்டும். சமூகநீதியின் தேவை, அதற்காக நடத்தப்பட்ட களப் போராட்டங்கள் மற்றும் அரசியல் போராட்டங்கள், விகிதாச்சார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை குறித்து இந்த விழாக்களின் போது அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பெரியவர் ஆனைமுத்து அவர்களின் நினைவாக சென்னையில் அவருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும். அதில் அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நிரந்தர கண்காட்சியை அமைக்க வேண்டும். 27% இட ஒதுக்கீட்டுக்காக அவர் நடத்திய போராட்டங்களை பள்ளிகளுக்கான பாட நூலில் ஒரு பாடமாக சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்