பட்டமளிப்பு விழா தாமதத்துக்கு அரசு காரணம் இல்லை -அமைச்சர் பொன்முடி பேட்டி

பட்டமளிப்பு விழா தாமதத்துக்கு தமிழ்நாடு அரசு காரணம் இல்லை என்றும், இதுவரை 9 லட்சத்து 29 ஆயிரத்து 142 மாணவ-மாணவிகள் பட்டம் பெற காத்திருக்கிறார்கள் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

Update: 2023-06-09 00:23 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் உள்ள திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், நெல்லை மானோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உள்பட பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் இருப்பதாக நேற்று செய்திகள் வெளியாகின. இதுதொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடியிடம் நிருபர்கள் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

கவர்னர் பட்டமளிப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினர் ஒருவரை அழைத்து வருவார். இதற்கு முன்பு வரை தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் துணைவேந்தர்கள் உள்பட சிலரை வைத்துதான் பட்டமளிப்பு விழா நடந்தது. இப்போது கவர்னர், வட இந்தியாவை சேர்ந்தவர்கள் மற்றும் மத்திய மந்திரிகளிடம் தேதி வாங்கி, அவர்களை வைத்துதான் பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்.

9¼ லட்சம் பேர் காத்திருப்பு

மத்திய மந்திரிகள், வட இந்தியாவை சேர்ந்தவர்கள் தேதி கொடுப்பதிலும் தாமதம் ஆகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் மாணவர்கள் தான். யார் வந்தாலும் வராவிட்டாலும், முன்னாள் துணைவேந்தர்களையோ, தமிழ் அறிஞர்களையோ, தமிழ்நாட்டை சேர்ந்தவர்களையோ வைத்து நடத்துவதில் எந்த தவறும் இருக்காது.

இங்கு படிக்கும் மாணவர்களில் வெளிநாடுகளுக்கு சென்று படிப்பவர்களும் சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு வெளிநாடுகளில் சென்று படிக்க பட்டப்படிப்பு சான்றிதழை தான் கேட்கிறார்கள். அதனால் அவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

கவர்னர், தமிழ்நாடு அரசின் ஆலோசனையை பெறுவதே கிடையாது. தமிழ்நாடு அரசின் ஆலோசனை இல்லாமலேயே நடைபெறும் நிகழ்ச்சியாக பட்டமளிப்பு விழா இருக்கிறது. கிட்டத்தட்ட அனைத்து பல்கலைக்கழகங்களிலும் 9 லட்சத்து 29 ஆயிரத்து 142 பேர் உயர்கல்வியில் தேர்ச்சி பெற்று, பட்டம் பெற முடியாமல் காத்து இருக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசு காரணம் இல்லை

குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகம் தவிர, 2022-ம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் யாருக்கும் 12 பல்கலைக்கழகங்களிலும் பட்டம் வழங்கவில்லை. பட்டமளிப்பு விழா நடைபெறாமல் இருப்பதற்கும், பட்டங்களை மாணவர்களுக்கு வழங்காமல் இருப்பதற்கும் தமிழ்நாடு அரசு காரணம் இல்லை. கவர்னர்தான் முழு காரணம். அவர் எப்போது தேதி கேட்டாலும் நாங்கள் கொடுக்க தயாராக உள்ளோம். கவர்னர் உடனடியாக பட்டமளிப்பு விழாவை அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நடத்த முன்வரவேண்டும். தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை நிச்சயமாக அவருக்கு உதவியாக இருக்கும்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் சட்டப்படி துணைவேந்தரை தேர்வு செய்வதற்கு தேடுதல் குழு அமைப்பதற்கு, என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ? அதை செய்து 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அரசு உத்தரவிட்டது. ஆனால் கவர்னர் பல்கலைக்கழக மானியக்குழு தரப்பில் இருந்து ஒருவரை நியமிக்க கேட்கிறார். அது எப்படி? சட்டத்தில் இருப்பதை மீறி செய்ய முடியும். அது தவறு. இதனால் இன்று வரை கிடப்பில் இருக்கிறது. தவறான நடைமுறைகளை கவர்னர் பின்பற்றுகிறார். இதேபோல், கல்வியியல் பல்கலைக்கழகத்திலும் இதே நிலைதான் நீடிக்கிறது.

மாணவர் சேர்க்கை

மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது. துணைவேந்தர்களிடம் பட்டமளிப்பு விழாவுக்கான முழு பொறுப்பையும் கொடுத்துவிட்டு, வேந்தராக நான் பங்கேற்கிறேன் என்று கவர்னர் சொன்னால், வெகு விரைவில் இந்த பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடைபெறும்.

தமிழ்நாட்டில் கல்வி சரியில்லை என்றால், தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு பட்டியலில் தமிழ்நாட்டின் கல்வி நிறுவனங்கள் முன்னேறி இருக்கின்றன. அண்ணா பல்கலைக்கழகம், மாநில கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

ஆரம்பக் கல்வியாக இருந்தாலும், உயர்கல்வியாக இருந்தாலும் தமிழ்நாட்டில் தான் சிறப்பாக உள்ளது. உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையும் உயர்ந்திருக்கிறது.

அரசியலை புகுத்தவில்லை

முதல்-அமைச்சர் எண்ணிக்கையை மட்டுமல்ல தரத்தையும் உயர்த்த வேண்டும். உயர்கல்வி பொற்காலமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அரசு செயலாற்றி கொண்டிருக்கிறது. இது கவர்னருக்கு தெரியவில்லை என்றால், எங்களை அழைத்தாவது கேட்கலாம். எந்த தொடர்பும் இல்லாத சூழ்நிலை உருவாகி கொண்டு இருக்கிறது.

அதை அவர் அரசியலுக்காக செய்து கொண்டு இருக்கிறார். இது நடைமுறை உண்மை. மக்களுக்கும் தெரியும். கல்வியில் நாங்கள் அரசியலை புகுத்தவில்லை. அவர் தான் அரசியலை புகுத்துகிறார். நாங்கள் மாணவர்கள் முன்னேற வேண்டும் என்ற உணர்வோடு தான் பணியாற்றுகிறோம்.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில், 10+2+3 என்ற முறைதான் நடைமுறைப்படுத்தப்படும். அதேபோல், இருமொழிக் கொள்கைதான் நடைமுறையில் இருக்கும். கவர்னர் சி.பி.எஸ்.இ. வாரியத்தில் தமிழை கட்டாய பாடமாக்க முடியாவிட்டால், மொழிப்பாடமாகவாது உருவாக முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்