முந்தி செல்ல வழிவிட மறுத்த அரசு பஸ்சின் கண்ணாடி உடைப்பு - மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

அம்மாபேட்டை அருகே முந்தி செல்ல வழிவிட மறுத்த அரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-06-22 08:18 GMT

அம்மாபேட்டை,

திருப்பூரில் இருந்து மேட்டூர் வழியாக தர்மபுரி செல்லும் அரசு பஸ் ஒன்று அம்மாபேட்டை அருகே நெரிஞ்சிப்பேட்டை அடுத்து மேட்டூரை நோக்கி சென்று கொண்டிருந்தது.

பஸ்சை தர்மபுரி மாவட்டம் அஞ்சனூரை சேர்ந்த சக்திவேல் (47) என்பவர் ஓட்டிச்சென்றார். இதில் அன்பழகன் என்பவர் கண்டக்டராக பணியில் இருந்தார்.

நேற்று காலை 9 மணி அளவில் பஸ் மேட்டூர் ரோட்டில் சென்று கொண்டிருந்த பொழுது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பஸ்சை முந்திச் செல்வதற்காக ஹாரன் அடித்துள்ளார். ஆனால் முன்னாள் வாகனம் வந்ததால் வழி கொடுக்காமல் சக்திவேல் தொடர்ந்து பஸ்சை இயக்கி உள்ளார்.

பஸ் வழி கொடுக்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த அந்த நபர் பஸ்சை முந்திச் சென்று பஸ்சினை நிறுத்தி டிரைவரை தகாத வார்த்தையால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் பஸ் கண்ணாடியை உடைக்காமல் விடமாட்டேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்று விட்டார்.

பின்னர் பஸ் நெரிஞ்சிப்பேட்டை அடுத்து மூலக்கடை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது டிரைவரிடம் வாக்குவாதம் செய்த அதே நபர் மீண்டும் பஸ்சை நிறுத்தி கண்ணாடி மீது கல்லால் அடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.

இதில் பஸ் கண்ணாடி உடைந்து சேதம் ஆனது. பயணிகளுக்கு ஏதும் அடிபடவில்லை. பஸ்சில் இருந்த பயணிகளை மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து மேலதிகாரிகளுக்கு பஸ் டிரைவர் சக்திவேல் தகவல் கொடுத்தார். பின்னர் பஸ் கண்ணாடியை உடைத்த மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அம்மாபேட்டை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து பஸ் கண்ணாடியை உடைத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்