சிறுமிக்கு பாலியல் தொல்லை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.
ஊட்டி,
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ராணா ஓரான் (வயது 30), பாபுலான் ஓரான் (30). இவர்கள் நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த தேவர்சோலை பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட்டில் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். வேலைக்காக அதே பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் சம்பவத்தன்று 2-ம் வகுப்பு படித்து வரும் 7 வயது சிறுமியை ராணா ஓரான், பாபுலான் ஓரான் 2 பேரும் சேர்ந்து சிறுமியை அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு தூக்கி சென்று உள்ளனர். அங்கு வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி சத்தம் போட்டாள். இதை கேட்டு அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டு வந்தனர். இதனால் பயந்து போன தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
2 பேர் கைது
பின்னர் சிறுமி நடந்தது குறித்து பெற்றோரிடம் கூறினார். இதுகுறித்து சிறுமியின் தந்தை ஊட்டி ஊரக மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்மணி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ராணா ஓரான், பாபுலான் ஓரான் 2 பேரும் சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.
இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஊட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.