குளச்சலில் பரபரப்பு சம்பவம்: வாலிபரை தாக்கி காரில் கடத்திய கும்பல்30 நிமிடத்தில் அதிரடியாக மீட்ட போலீஸ்

குளச்சலில் இருந்து சொகுசு காரில் கடத்தி செல்லப்பட்ட வாலிபரை 30 நிமிடங்களில் போலீசார் அதிரடியாக மீட்டனர்.

Update: 2023-07-28 21:31 GMT

குளச்சல்:

குளச்சலில் இருந்து சொகுசு காரில் கடத்தி செல்லப்பட்ட வாலிபரை 30 நிமிடங்களில் போலீசார் அதிரடியாக மீட்டனர்.

வாலிபர் கடத்தல்

குளச்சல் பயணியர் விடுதி சந்திப்பில் நேற்று மாலையில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது சந்திப்பில் இருந்து கடலுக்கு செல்லும் சாலையோரத்தில் கருப்பு நிற சொகுசு கார் ஒன்று நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது.

இரவு 7 மணிக்கு காரில் இருந்து கீழே இறங்கிய கும்பல் திடீரென ஒரு வாலிபரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றியது. அந்த வாலிபர் சத்தம் போடாமல் இருக்க கும்பலில் ஒருவர் வாலிபரின் வாயை பொத்தினார். கும்பலின் பிடியில் இருந்து வாலிபர் தப்ப முயற்சித்தும் முடியவில்லை.

இதை ஸ்கூட்டர் ஓட்டி வந்த ஒருவர் பார்த்தார். உடனே அவர் அந்த வாலிபரை மீட்பதற்காக காரின் முன் ஸ்கூட்டரை நிறுத்தி கார் செல்ல முடியாதபடி தடுத்தார். அந்த நேரம் எதிரே அரசு பஸ் ஒன்று வந்தது. இதனால் கார் செல்ல முடியவில்லை. இதற்கிடையே பொதுமக்களும் அங்கு கூடினர். ஆனால் கும்பலுக்கு பயந்த அவர்கள் கார் அருகே செல்லவில்லை. இந்த பரபரப்பான சூழலில் எதிரே நின்ற அரசு பஸ் நகர்ந்து சென்றதும், காரில் வாலிபரை ஏற்றிய கும்பல் அவரை கடத்தி சென்றனர்.

மின்னல் வேகத்தில் சென்ற கார்

அப்போது அந்த வாலிபரை கும்பல் அடித்து உதைத்தது. மேலும் காரும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றது. இதுபற்றி தகவல் அறிந்ததும், குளச்சல் சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் விரைந்து வந்து கார் பதிவு எண் குறித்து விசாரணை நடத்தினார். கேரள மாநில பதிவு கார் எண் என அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.

புதுக்கடையில் மீட்பு

புதுக்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த சொகுசு காரை போலீசார் மடக்கி பிடித்து வாலிபரை மீட்டனர்.

பின்னர் பிடிபட்டவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களிடம் கருங்கல் இன்ஸ்பெக்டர் இசக்கிதுரை விசாரணை நடத்தினார்.

அப்போது கடத்தப்பட்ட வாலிபர் குளச்சல் துறைமுகத் தெருவை சேர்ந்தவர் என்பதும், கடத்தி செல்ல முயன்றவர்கள் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. குளச்சல் வாலிபர் கேரள நபர்களின் விசைப்படகிலிருந்து ரூ.40 ஆயிரம், ஜி.பி.எஸ். மற்றும் ஓயர்லஸ் கருவிகளை திருடி விட்டு குளச்சல் தப்பி வந்தவர் என்பது தெரிய வந்தது. இது குறித்து கேரள விசைப்படகினர் பள்ளித்தோட்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.ஆனால் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இதனால் திருடிய வாலிபரை பிடித்து பள்ளித்தோட்டம் போலீசில் ஒப்படைக்க குளச்சல் வந்து அவரை கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. மேலும் இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. காரில் கடத்தப்பட்ட வாலிபரை 30 நிமிடங்களில் ேபாலீசார் அதிரடியாக மீட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்