மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக நீடிப்பு
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 18,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
சேலம்,
மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு வாரமாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து அதிகபட்சமாக வினாடிக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வந்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைபுரண்டு ஓடியது. ஒரு சில இடங்களில் காவிரி ஆற்று கரையையொட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது.
இதனிடையே கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு படிப்படியாக குறைந்ததால், ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறையத் தொடங்கியது. இந்நிலையில் கடந்த ஓரிரு தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 18 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்றும் 18 ஆயிரம் கன அடியாக தொடர்ந்து நீடித்து வருகிறது.
அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 18,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.