மேட்டூர்:-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,212 கனஅடியாக குறைந்து உள்ளது.
மேட்டூர் அணை
காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவையை மேட்டூர் அணை பூர்த்தி செய்து வருகிறது. இந்த அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் ஜனவரி மாதம் 28-ந் தேதி மாலையில் நிறுத்தப்படும். இதன் அடிப்படையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 28-ந் தேதி மாலை 6 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.
படிப்படியாக குறைகிறது
அப்போதைய நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 103.87 அடியாக இருந்தது. மறுநாளான 29-ந் தேதி முதல் காவிரி டெல்டா மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,000 கனஅடிக்கு கீழ் குறையும் நேரங்களில் அணையின் நீர்மட்டம் குறைந்தும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,000 கனஅடிக்கு மேல் அதிகரிக்கும் நேரங்களில் அணையின் நீர்மட்டம் அதிகரித்தும் மாறி மாறி இருந்து வருகிறது.
குறிப்பாக கடந்த 3-ந் தேதி வினாடிக்கு 1,223 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று முன்தினம் வினாடிக்கு 1,222 கனஅடியாகவும், நேற்று வினாடிக்கு 1,212 கனஅடியாகவும் படிப்படியாக குறைந்து வருகிறது.
103.53 அடி
இருப்பினும் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட நீர்வரத்து் அதிகமாக உள்ளதால் அணை நீர்மட்டம் கடந்த 5 வாரங்களாக 103½ அடிக்கும் மேலாகவே உள்ளது. அந்த வகையில் நேற்று அணை நீர்மட்டம் 103.53 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.