ராமேசுவரம், மண்டபம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
தடைக்காலம் முடிந்து ராமேசுவரம், மண்டபம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
ராமேசுவரம்,
61 நாள் தடைக்காலம் முடிந்த நிலையில் ராமேசுவரம், மண்டபம் உள்பட ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இருந்து மீனவர்கள் விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றனர்.
தடைக்காலம்
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல்-15 முதல் ஜூன் 14-ந் தேதி வரையிலும் மீன்கள் இனப்பெருக்க கால சீசனாக உள்ளதால், இந்த 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல அரசால் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டின் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் தொடங்கியது.
அதைத்தொடர்ந்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம், ஏர்வாடி, தொண்டி உள்பட ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை.
இந்த நிலையில் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்தது. இந்த தடைக்காலம் முடிவடைந்த நிலையில் ராமேசுவரத்தில் இருந்து 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்றனர்.
மீன்பிடி சாதனங்கள்
மீனவர்கள் மீன்பிடிக்க புறப்பட்டதையொட்டி நேற்று காலை முதலே ராமேசுவரம் துறைமுக பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
பெட்ரோல் 'பங்க்'களில் டீசல் வாங்குவதற்கு கேன்களுடன் மீனவர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் படகுகளில் மீன்களை பதப்படுத்துவதற்கு தேவையான ஐஸ் கட்டிகள், ஐஸ்பாக்ஸ், மீன்பிடி வலை, மீன்பிடி சாதனங்களை ஏற்றும் பணியிலும் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். 61 நாட்களுக்கு பிறகு மீன் பிடிக்க சென்றுள்ளதால் அதிக மீன்கள் கிடைக்கும் என்று ராமேசுவரம் மீனவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
மண்டபம்-ஏர்வாடி
இதேபோல் மண்டபம், ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த மீனவர்களும் நாளை காலை கரை திரும்புவார்கள்.