மலைப்பகுதியில் உருவாக்கப்படும் முதல் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையம்

அகில இந்திய அளவில் புதூர்நாடு மலைப்பகுதியில் உருவாக்கப்படும் முதல் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தென்காசி ஜவஹர் பார்வையிட்டார்.

Update: 2023-03-26 17:27 GMT

கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தென்காசி ஜவகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கந்திலி ஊராட்சி ஒன்றியம் ராச்சமங்கலம் ஊராட்சியில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் எண்ணை வித்துக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ் 2.50 ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை செயல் விளக்க திடல், மட்றப்பள்ளி ஊராட்சியில் ரூ.14.37 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வாரச்சந்தை கடைகள், விநாயகபுரத்தில் விவசாயி ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தில் வழங்கப்பட்டுள்ள ரொட்டவேட்டர் ஆகியவற்றை மாவட்ட கண்காணிப்ப அலுவலரும், அரசு கூடுதல் தலைமைச் செயலாளருமான தென்காசி எஸ்.ஜவஹர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பராமரிப்பு மையம்

புதூர்நாடு ஊராட்சியில் ரூ.2 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலை பணி, ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்தில் நடைபெறும் நூலக புனரமைப்பு பணி, ரூ.8 லட்சத்தில் 90 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது ஆகியவற்றையும் அவர் ஆய்வு செய்தார்.

புதூர்நாடு அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.28.84 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிரத்தியேக பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவு கட்டடத்தையும்பார்வையிட்டார். இங்கு பச்சிளம் குழந்தைகள் சிறப்பு பராமரிப்பு மையம் ஒன்று உருவாக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் விரைவில் திறந்து வைக்கப்பட உள்ளது. இந்த பிரத்யேக பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையம் அகில இந்திய அளவில் பழங்குடியினர் மக்கள் நலனுக்காக மலைப்பகுதியில் உருவாக்கப்படும் முதல் மையமாகும்.

நலத்திட்ட உதவி

திருப்பத்தூர் வட்டம் புதூர்நாடு அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 பயனாளிகளுக்கு குழந்தை நல பரிசு பெட்டகங்கள் மற்றும் ஊட்டச்சத்து பெட்டகத்தையும், 8 நபர்களுக்கு குடும்ப அட்டைகளையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் வழங்கினர்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மகளிர் திட்ட இயக்குனர் ரேணுகாதேவி, வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, வேளாண்மை இணை இயக்குநர் பாலா, உதவி இயக்குனர் ராகினி, தாசில்தார் சிவப்பிரகாசம் உள்பட பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்