தோட்டத்தில் நிலை தடுமாறி விழுந்து விவசாயி சாவு
மூலைக்கரைப்பட்டி அருகே தோட்டத்தில் நிலை தடுமாறி விழுந்து விவசாயி இறந்தார்.
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள அரசனார்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லையா மகன் முத்துகிருஷ்ணன் (வயது 49). விவசாயி. இவர் மூலைக்கரைப்பட்டியில் இருந்து கடம்பன்குளத்துக்கு செல்லும் சாலை பகுதியில் உள்ள ஒருவரது தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்து விவசாயம் செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல வாழைக்கு தண்ணீர் பாய்க்க சென்றவர் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்து மயங்கினார். இரவு யாரும் பார்க்காததால் முத்துகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்ததும் மூலைக்கரைப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வி விரைந்து சென்றார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.