வயல்வெளியில் கிடந்த மர்ம பொருளால் பரபரப்பு

வயல்வெளியில் கிடந்த மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-12-05 19:12 GMT

தா.பழூர்:

மர்ம பொருள்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள அணைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன்(வயது 42). விவசாயியான இவர் தனது வயலில் மழை பெய்து தேங்கி நின்ற தண்ணீரை நிலத்தில் இருந்து அகற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவரது வயலில் ஒரு மர்ம பொருள் விழுந்து கிடந்ததை கண்டு அருகில் சென்றார். அதில் சிறிய எலக்ட்ரானிக் கருவி ஒன்று இருந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தேவேந்திரன், அது வெடிபொருளாக இருக்குமோ? என்று அச்சமடைந்து, இது பற்றி விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

ஆய்வு செய்வதற்கான கருவி

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த கருவியை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது, அந்த கருவி வானத்தில் உள்ள காற்றின் மாசுபாடு, ஈரப்பதம், வெப்பநிலை, காற்றின் திசை உள்ளிட்ட பல்வேறு தரவுகளை ஆய்வு செய்வதற்காக பாராசூட் வடிவ துணைக்கருவியுடன் வானில் பறக்க விடப்படும் பொருள் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

வானில் பறக்க விடப்பட்டவுடன் 2 முதல் 3 நாட்கள் வரை அதில் இருக்கும் கருவிகள் தரையில் இருக்கும் கட்டுப்பாட்டு அறைக்கு தரவுகளை கொடுக்கும். பின்னர் அதில் உள்ள பேட்டரி செயலிழந்த பிறகு சிறிது, சிறிதாக காற்றின் திசையில் பறந்து ஏதாவது ஒரு இடத்தில் விழுந்து விடும். அந்த வகையில் இது ஆணைக்குடி கிராமத்தில் விழுந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுமக்கள் நிம்மதி

இதையடுத்து அதனை மீட்ட விக்கிரமங்கலம் போலீசார் ஸ்ரீபுரந்தான் தெற்கு கிராம நிர்வாக அலுவலர் அர்ஜூனிடம் அதனை ஒப்படைத்தனர். அதனைப் பெற்ற அவர், வருவாய் ஆய்வாளர் வேணுகோபால் மூலம் தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார்.

வானில் இருந்து விழுந்து கிடந்த மர்ம பொருளால் அப்பகுதியில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அது சாதாரண ஆய்வு செய்யும் பெட்டி கருவி என்பது தெரிந்தவுடன் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்