விவசாயிகளுக்கு உதவாமல் போன உலர்களம்

சுல்தான்பேட்டையில் விவசாய விளை பொருட்களை உலர வைக்கும் உலர்களம் தற்போது விவசாயிகளுக்கு உதவாத வகையில் உள்ளது. அதனால் அதனை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

Update: 2023-10-25 19:00 GMT

சுல்தான்பேட்டை ஒன்றிய அலுவலக வளாகத்தில் சுல்தான்பேட்டை வட்டார வேளாண் அலுவலகம், தோட்டக்கலைத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த 2 அலுவலகத்திற்கு முன்புறம் உலர்களம் உள்ளது. இந்த உலர்களத்தில் அருகில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் சோளம், மக்காச்சோளம் மற்றும் சிறுதானியங்களை கட்டணமின்றி வெயிலில் உலர்த்தி காயவைத்தனர். பின்னர் நீண்ட நாட்கள் பயன்படுத்தும் வகையில் சாக்குகளில் கட்டி வீடுகள் மற்றும் விளைநிலங்களில் பாதுகாப்பாக இருப்பு வைத்து, தேவைப்படும்போது விற்பனை செய்தனர்.


இந்தநிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்த உலர்களம் பராமரிக்கப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக களத்தில் பல இடங்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆங்காங்கே செடி, கொடிகள் முளைத்து அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. இதனால், விவசாயிகள் உலர்களத்தில் தானியங்களை காயவைத்து பாதுகாத்து பயன்படுத்த முடியாத அவல நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் விளைபொருட்கள் சேதமாகும் நிலை உள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் நனைந்த பயர்கை உலர வைக்க முடியாத நிலை உள்ளது.


அதனால் விவசாயிகளுக்கு உதவாமல் உள்ள உலர்களத்தை உடனடியாக சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும் அவர்கள்,அறுவடைக்குள் உலர்களத்தை பயன்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றனர்


Tags:    

மேலும் செய்திகள்