வனத்துறையிடம் ஒப்படைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

டேன்டீ தேயிலை தோட்டங்களை வனத்துறையிடம் ஒப்படைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மா.கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

Update: 2022-11-21 18:45 GMT

கூடலூர்

டேன்டீ தேயிலை தோட்டங்களை வனத்துறையிடம் ஒப்படைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மா.கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

நிதி அளிப்பு கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில அலுவலக கட்டிட நிதி அளிப்பு கூட்டம், கூடலூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாநில கமிட்டி உறுப்பினர் பத்ரி, விவசாய சங்க மாவட்ட தலைவர் வாசு ஆகியோர் முன்னிலை வைத்தனர். செயலாளர் சி.கே. மணி வரவேற்றார். கூட்டத்தில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ேபசும்போது, மத்தியில் பா.ஜ.க. அரசு மோசமான ஆட்சி செய்து வருகிறது. வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மின்சார சட்ட திருத்த மசோதா நிறைவேறினால், மின்சாரம் தனியார் வசம் சென்று விடும். இந்த நாட்டை மதவாத சக்தியிடம் இருந்து மீட்க வேண்டும். இதற்காக தொழிலாளர்கள் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்றார். முடிவில் செயற்குழு உறுப்பினர் குஞ்சு முகமது நன்றி கூறினார். கூட்டத்தில் நிர்வாகிகள் ராஜன், ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

டேன்டீ பிரச்சினை

பின்னர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வேலையில்லா திண்டாட்டம், மாநில உரிமைகளை பறித்தல், விலைவாசி உயர்வு, பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் கவர்னர்கள் மூலம் போட்டி ஆட்சி நடத்துவது, இந்தி திணிப்பு போன்றவற்றை எதிர்த்து அடுத்த மாதம்(டிசம்பர்) கடைசி அல்லது ஜனவரி மாதத்தில் மண்டல அளவில் மிகப்பெரிய இயக்கம் தொடங்கப்பட உள்ளது. கூடலூர் தாலுகாவில் ஜென்ம ஒழிப்பு ரயத்துவாரி சட்டத்தில் அரசு உடமையாக்கப்பட்ட நிலங்களில் வசிக்கும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும். சட்டப்பிரிவு-17 வகை நில பிரச்சினையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்.

டேன்டீ தேயிலை தோட்டங்களை வனத்துறையிடம் ஒப்படைக்கும் முடிவு சரியானது அல்ல. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு பொதுத்துறையின் பெரும் பகுதி தனியாருக்கு விற்கப்பட்டு விட்டது. லாபத்தில் இயங்கிய பொதுத்துறை நிறுவனங்களையே நடத்த முடியாத நிலையில், எவ்வாறு டேன்டீ நிறுவனத்தை நடத்த முடியும்.

தேவர்சோலையில் தனியார் தேயிலை எஸ்டேட்டில் மின்சாரம் தாக்கி இறந்த பெண் தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரண தொகை வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்