சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்
கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
குண்டும், குழியுமான சாலை
கூத்தாநல்லூர் அருகே சேகரை கிராமத்தில் மிளகுகுளம் தெரு உள்ளது. இந்த தெருவில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் பயன்பாட்டிற்காக மிளகுகுளம் தெருவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை வழியாக கடைவீதி, ஆஸ்பத்திரி மற்றும் ஏனைய இடங்களுக்கு அப்பகுதி மக்கள் சென்று வந்தனர்.
இந்த வழியாக தினமும் கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மிளகுகுளம் தெரு சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. பார்ப்பதற்கு மண் சாலை போன்று காட்சி அளிக்கிறது.
சீரமைக்க வேண்டும்
மழை காலங்களில் தண்ணீர்தேங்கி சேறும், சகதியுமாக சாலை மாறி விடுகிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.