சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்
திருச்சிற்றம்பலத்தில் மழைநீர் வடிகால் வாய்க்காலில் ஆக்கிரமிப்பை அகற்றி சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சிற்றம்பலம்:
திருச்சிற்றம்பலத்தில் மழைநீர் வடிகால் வாய்க்காலில் ஆக்கிரமிப்பை அகற்றி சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு
திருச்சிற்றம்பலம் ஊராட்சி கீழத்தெரு பகுதியில் தற்போது குடியிருப்பு வீடுகள் அதிக அளவில் பெருகி வருகின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு மழை நீர் வடிகால் வாய்க்கால்கள் இந்த பகுதியின் வழியாக சென்று புராதனவனேஸ்வரர் கோவில் சன்னதி குளம், அதன் அருகில் உள்ள சூரிய குளம் மற்றும் எமதர்மராஜன் கோவில் குளம் ஆகிய குளங்கள் வரை மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் இருந்தது. தற்போது அந்த வாய்க்கால்கள் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விட்டதால் வடிகால் வாய்க்கால் இருந்ததற்கான அடிச்சுவடுகளே தற்போது இல்லாமல் உள்ளது.
பொதுமக்கள் அவதி
வருவாய்த்துறை ஆவணங்களில் ேமற்கண்ட பகுதியில் வாய்க்கால்கள் இல்லை என உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். மேலும், மழைக்காலங்களில் கீழத்தெரு பகுதியில் மழைநீர் அதிக அளவில் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
சேதமடைந்த சாலை
இதைத் தவிர, திருச்சிற்றம்பலம் சந்தை ரோட்டில் இருந்து பிரிந்து புது தெரு வழியாக வலச்சேரிக்காடு கிராமத்திற்கு செல்லும் சாலை ஆங்காங்கே சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கீழத்தெரு பகுதியில் மழை நீர் வடிகால் வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி,. திருச்சிற்றம்பலம் புதுத்தெரு வலச்சேரிக்காடு செல்லும் சேதம் அடைந்த சாலையையும் உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.