ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரம் மாற வேண்டும் என வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் பேச்சு

ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரம் மாற வேண்டும் என வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் பேசினார்.

Update: 2023-02-18 17:58 GMT

வாணியம்பாடி

ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரம் மாற வேண்டும் என வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் பேசினார்.

வாணியம்பாடியில் முத்தமிழ் மன்றம் சார்பில் 30-ம் ஆண்டு முத்தமிழ் இலக்கிய திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் க.சுரேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் நா.பிரகாசம், நெறியாளர் விசாகப்பெருமாள் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். முத்தமிழ் மன்ற தலைவர் வெங்கடேசன் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது:-

இந்திய அளவில் பல்வேறு மொழிகள் இருப்பினும் அதில் தொன்மையாக தமிழ் மொழி தான் உள்ளது. தமிழ் மொழியை வளர்த்தால் மட்டும் போதாது, தமிழனும் வளர்ந்து முன்னேற வேண்டும். அதற்கு அரசு அதிகாரிகள் மட்டுமல்லாமல், அரசியல்வாதிகளும், நாமும் மாற வேண்டும். இன்று ஒரு நகரமன்ற உறுப்பினர் தேர்தலுக்கு மட்டும் ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையில் செலவாகிறது என்று கூறுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். இதனை தமிழ் மன்றம், தமிழ் இலக்கிய மன்றம், முத்தமிழ் மன்றம் போன்றவை முன்னின்று மக்களுக்கு விளக்கி சொல்ல வேண்டும்.

நாட்டில் நல்ல மக்களாட்சி அமைய வேண்டும். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் படித்தவர்களாக வரவேண்டும், பணம் வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த பதவிக்கு வருவார்கள் என்ற நிலை மாற வேண்டும், அப்போதுதான் இந்தியாவில் மிகச்சிறந்த ஆட்சி வரமுடியும்.

இந்தியாவிற்கே தமிழ்நாடு ஒரு முன்மாதிரி மாநிலமாக மாற வேண்டும். தமிழ்நாட்டில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரம் இல்லாத நிலை உருவாக வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இவை முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்.

தேர்தலின் போது மக்களுக்கு பணம் கொடுப்பது நிறுத்தப்பட வேண்டும். அதேபோல் மக்களும் பணம் வாங்க மாட்டோம் என்ற முடிவுக்கு வர வேண்டும். வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அன்பரங்கம், தமிழிசை அரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்