வீடு புகுந்து கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை

திண்டுக்கல் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து கட்டிட தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்டார். மனைவி கண் எதிரே தீர்த்து கட்டிய 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-08-07 20:00 GMT

கட்டிடத்தொழிலாளி

திண்டுக்கல் அருகே உள்ள பொன்மாந்துறை புதுப்பட்டியை சேர்ந்தவர் இருளப்பன் என்ற ராசு (வயது 40). கட்டிடத்தொழிலாளி. அவருடைய மனைவி ஹேமலதா (40). இந்த தம்பதிக்கு ரம்யா கிருஷ்ணன் (21), ரஞ்சனி (17) என்ற 2 மகள்களும், கணேசன் (19) என்ற மகனும் உள்ளனர்.

இதில், ரம்யா கிருஷ்ணன் திருமணமாகி கணவருடன் மணப்பாறையில் வசித்து வருகிறார். பிளஸ்-2 படிக்கிற ரஞ்சனி, நேற்று பள்ளிக்கு சென்று விட்டார். பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் தங்கியிருந்து கணேசன் படித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று ஹேமலதாவும், ராசுவும் வீட்டில் இருந்தனர். ராசு ஒரு அறையில் தூங்கி கொண்டிருந்தார். ஹேமலதா வீட்டு வேலை செய்து கொண்டிருந்தார். மதியம் 2.30 மணி அளவில் 6 பேர் கொண்ட கும்பல் ராசு வீட்டுக்கு வந்தனர்.

வெட்டிக்கொலை

திடீரென அவர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்தனர். இதனைக்கண்ட ஹேமலதா அதிர்ச்சி அடைந்து அவர்களை தடுக்க முயன்றார்.

ஆனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள், அவரை கீழே தள்ளி விட்டு தூங்கிக் கொண்டிருந்த ராசுவை சரமாரியாக வெட்டினர். இதனால் திடுக்கிட்டு விழித்த ராசு, அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றார். இருப்பினும் அவர்கள் சுற்றி வளைத்து தலையை குறி வைத்து வெட்டி சாய்த்தனர்.

இதில் ராசுவின் முகம் சிதைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தனது கண் எதிரே கணவரை வெட்டிக்கொலை செய்ததை கண்டு ஹேமலதா அலறினார். அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் கொலை வெறி கும்பலை சேர்ந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு உதயகுமார், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அழகுபாண்டி, அருண்நாராயணன், பாலசுப்ரமணியன் ஆகியோர் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கொலை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதேபோல் சம்பவ இடத்தில் பதிவான ரேகைகளை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். போலீஸ் மோப்பநாய் டிம்பி வரவழைக்கப்பட்டது. அது, கொலை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

6 பேருக்கு வலைவீச்சு

இதற்கிடையே ராசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ராசுவுக்கும், அவரது உறவினருக்கும் இடப்பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் ராசு தீர்த்துக்கட்டப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதி விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

இது தொடர்பாக தனிப்படை அமைத்து 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீடு புகுந்து கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம், திண்டுக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்