தேவர்சோலையில் தொகுப்பு வீடுகள் கட்டும் பணி பாதியில் நிறுத்தம்; ஆதிவாசி மக்கள் அவதி

தேவர்சோலையில் தொகுப்பு வீடுகள் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் தொடர்ந்து பாழடைந்த வீடுகளில் வசித்து வரும் ஆதிவாசி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

Update: 2023-08-20 18:45 GMT

மாரக்கரா ஆதிவாசி கிராமத்தில் புதிய வீடு கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டதை படத்தில் காணலாம்.

கூடலூர்: தேவர்சோலையில், தொகுப்பு வீடுகள் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் தொடர்ந்து பாழடைந்த வீடுகளில் வசித்து வரும் ஆதிவாசி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

தொகுப்பு வீடுகள் கட்டுமான பணி நிறுத்தம்

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட மாரக்கரா ஆதிவாசி கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. இவர்கள் பழுதடைந்த வீடுகளிலும், பலர் குடிசை வீடுகளிலும் வசித்து வந்தனர். இதனால் மழைக்காலத்தில் அவர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர். தொடர்ந்து அவர்கள் தங்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையொட்டி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதேப்பகுதியில் புதிய தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கு பேரூராட்சி மூலம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. தொடர்ந்து அடித்தளம் அமைக்கப்பட்டு சில வீடுகள் கட்டப்பட்டது. ஆனால் சில வீடுகளுக்கு அடித்தளமும், மேல் சுவரும் கட்டப்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களால் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

ஆதிவாசி மக்கள் அவதி

இதனால் அப்பகுதி ஆதிவாசி மக்கள் வசிக்க நல்ல வீடுகள் இல்லாமல் தொடர்ந்து பழுதடைந்த வீடுகள், குடிசைகளிலேயே வசித்து அவதி அடைந்து வருகின்றனர். மேலும் தற்போது மழைக்காலம் என்பதால் இரவில் வீட்டிற்கு வெளியே திறந்த வெளியில் தூங்கமுடியாமல் ஒரே வீட்டுக்குள் சிறிய இடத்தில் பல குடும்பங்கள் தூங்க வேண்டிய அவல நிலை காணப்படுகிறது. இதனால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள வீடுகள் கட்டுமான பணியை தொடங்கி முடித்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என ஆதிவாசி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை என்று தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்