பெண்-குழந்தையை ஆஸ்பத்திரிக்கு தனது காரில் அழைத்து சென்ற கலெக்டர்
விபத்தில் காயம் அடைந்த பெண் மற்றும் அவரது குழந்தையை தனது காரில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற கலெக்டருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்
விபத்தில் காயம் அடைந்த பெண் மற்றும் அவரது குழந்தையை தனது காரில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற கலெக்டருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
விபத்தில் பெண்-குழந்தை காயம்
நாகை மாவட்டம் அம்பல் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 25). இவர் தனது மனைவி சுபஸ்ரீ(23) மற்றும் 10 மாத குழந்தை சர்வேஷ் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறைக்கு வந்து கொண்டிருந்தார்.வழுவூர் அருகே பண்டாரவடை கிராமத்தில் மோட்டார் சைக்கிள் சென்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் டயர் வெடித்தது. இதனால் நிலை தடுமாறி 3 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இந்த விபத்தில் சுபஸ்ரீக்கு தலையில் பலத்த அடிபட்டது. குழந்தையும் காயம் அடைந்தது.
காரில் அழைத்து சென்ற கலெக்டர்
அப்போது அந்த வழியாக மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா தனது காரில் சென்று கொண்டு இருந்தார். விபத்தை பார்த்ததும் காரை விட்டு இறங்கி அருகில் சென்று பார்த்தார். அங்கு காயமடைந்த சுபஸ்ரீ, குழந்தை சர்வேஷ் ஆகிய இருவரையும் கலெக்டர் தனது காரில் அழைத்து சென்று சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.இதை தொடர்ந்து கலெக்டர் லலிதா டாக்டர்களை அழைத்து காயம் அடைந்த சுபஸ்ரீ, அவரது குழந்தை சர்வேசுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
பொதுமக்கள் பாராட்டு
விபத்து நடந்ததை பார்த்ததும் உடனடியாக அவர்களுக்கு உதவுவதற்காக காயம் அடைந்த பெண்ணையும் அவரது குழந்தையையும் ஆஸ்பத்திரிக்கு தனது காரில் அழைத்துச்சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த கலெக்டரின் மனிதாபிமான செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.