பணியை புறக்கணித்து துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பணியை புறக்கணித்து துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2022-10-12 02:37 IST

பெரம்பலூர் நகராட்சியில் சுமார் 200 துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் இவர்களுக்கு மாத ஊதியம் முறையாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தினக்கூலியாக ரூ.550 வழங்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டும், சென்னையைச் சேர்ந்த தனியார் ஒப்பந்த நிறுவனம் ரூ.276 மட்டுமே வழங்குவதாகவும், இந்த சம்பளத்தையும் முறையாக வழங்குவதில்லை என்று துப்புரவு பணியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட தனியார் ஒப்பந்த நிறுவன பணியாளர்களிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று தெரிகிறது.

இந்தநிலையில், மாத ஊதியத்தை முறையாக வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகைக்கான ஊக்கத்தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், தளவாடப் பொருட்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, துப்புரவு பணியாளர்கள் நேற்று பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்