கலைமாமணி விருது வழங்குவது குறித்து முதல்-அமைச்சரிடம் ஆலோசிக்கப்படும்

கலைமாமணி விருது வழங்குவது குறித்து முதல்-அமைச்சரிடம் ஆலோசிக்கப்படும்

Update: 2022-09-09 19:36 GMT

திருவிடைமருதூர்

இ்சைக்கருவிகள் உற்பத்தியாளர்களுக்கு கலைமாமணி விருது வழங்குவது குறித்து முதல்-அமைச்சரிடம் ஆலோசிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

முப்பெரும் விழா

கும்பகோணம் அருகே நரசிங்கன்பேட்டை புவிசார் குறியீடு பெற்ற நாதஸ்வரம் அஞ்சல் உறை வெளியீட்டு விழா, இசைக்கருவி தயாரிப்பாளர்களுக்கு பாராட்டு விழா, நாதஸ்வர இசை திருவிழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் ராமலிங்கம், கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு தலைமை கொறடா கோவி.செழியன் வரவேற்றார். இதில் நாதஸ்வரம் கலைமாமணி கணேசன், முத்தமிழ் பேரவை தலைவர் ராமானுஜம், வக்கீல் சஞ்சய் காந்தி, ஒன்றியக்குழு தலைவர் சுபா திருநாவுக்கரசு, ஒன்றியக்குழு துணை தலைவர்கள் உள்ளூர் டி. கணேசன், கோ.க அண்ணாதுரை, பத்மாவதி கிருஷ்ணராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் நாதஸ்வரம் அஞ்சல் உறையை அஞ்சல் மண்டல தலைவர் அப்பாக்கண்ணுகோவிந்தராஜன் வெளியிட, அதனை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெற்றுக்கொண்டார். முன்னதாக நாதஸ்வர கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் உஷா, ராஜா, பேரூராட்சி தலைவர்கள் புனிதா ஜெயபால் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பேட்டி

பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் புவிசார் குறியீடு பெற்றதும் அல்லாமல் அதற்கான அஞ்சல் உறை வெளியீட்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 47 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றிருந்தோம் என்று சொன்னாலும், தஞ்சை மாவட்டத்தில் 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுள்ளது சிறப்புக்குரியது. குறிப்பாக திருவிடைமருதூரில் நான்கு பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இசைக்கருவிகள் உற்பத்தியாளர்களுக்கு கலைமாமணி விருது, ஊக்கத்தொகை வழங்குவது குறித்து முதல்-அமைச்சரிடம் எடுத்து கூறி ஆலோசிக்கப்படும்.

முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பார்

கள்ளக்குறிச்சியில் பள்ளிக்கூடம் திறப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது. அங்கு படித்து கொண்டிருந்த 3 ஆயிரம் மாணவர்களுக்கு மற்ற இடங்களில் வைத்து வகுப்புகள் நடத்தப்படுகிறது. கோர்ட்டில் வழக்கு நடந்து வருவதால் அந்த முடிவிற்கு ஏற்ப முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பார்கள். பள்ளிவிடும் நேரங்களில் கூடுதலாக பஸ்கள் விடுவதற்கு எங்கள் துறை சார்பாக அமைச்சரிடம் பேசி உள்ளோம்.

கூடுதலாக பஸ்கள் விடும்போது பிரச்சினைகள் தீர்ந்து விடும். தேர்வில் கலந்து கொள்ள இருக்கும் குழந்தைகளுக்கு பயம் இருக்க கூடாது என்பதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு குழு ஒன்று தனியாக அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்