தகுதியானவர்கள் யாரும் விடுபட கூடாதென்று முதல்-அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதியானவர்கள் யாரும் விடுபட்டு விட கூடாதென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

Update: 2023-09-24 17:34 GMT

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதியானவர்கள் யாரும் விடுபட்டு விட கூடாதென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

இலவச சிறப்பு மருத்துவ முகாம்

திருவண்ணாமலை ஒன்றியம் பறையம்பட்டு ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் செல்வகுமார் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு மருத்துவ முகாமை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து கர்ப்பிணிகளுக்கான ஸ்கேன் சென்டரை நேரில் சென்று பார்வையிட்டார்.

பின்னர் அவர் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து நல பெட்டகம், தாய்மார்களுக்கு குழந்தைகள் நல பெட்டகம், மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கான மருந்து பெட்டகம் ஆகிய நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

முதல்- அமைச்சரும், அமைச்சர்களும் பிறப்பிக்கும் ஆணைகளை நிறைவேற்றும் வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு அலுவலர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போது வருமுன் காப்போம் என்ற திட்டத்தை கொண்டு வந்தார். இடையில் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தவர்கள் இந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை.

தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்று உள்ள மு.க.ஸ்டாலின் மீண்டும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை கொண்டு வந்தார்.

நம்மைக் காக்கும் 48

இதன் மூலம் ஒரு வட்டாரத்தில் ஆண்டுக்கு 3 முகாம்கள் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை மாவட்டத்தில் 34 முகாம்கள் நடத்தப்பட்டு 33 ஆயிரத்து 540 பயனாளிக்கு இந்த திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. தி.மு.க. 1967-ல் ஆட்சிக்கு வந்தபோது தான் தமிழ்நாட்டில் கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் பிரசவத்தின் போது குழந்தை இறப்பு விகிதம் குறைந்து காணப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த விகிதம் குறைய கர்ப்பிணிகள் ஊட்டச்சத்து பொருட்களை எடுத்து கொள்ள வேண்டும். மருத்துவர் சொல்லும் ஆலோசனைகளின் படி மருந்துகளை எடுத்து கொள்ள வேண்டும்.

மேலும் பெரிய வியாதிகளால் பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்கள் எந்தவித தடையுமின்றி சிகிச்சை பெற்று பயன்பெறும் வகையில் கலைஞர் காப்பீட்டு திட்டத்தை கருணாநிதி கொண்டு வந்தார்.

இந்த ஆண்டில் மட்டும் ரூ.517 கோடி பிரிமியம் தொகை செலுத்தப்பட்டு உள்ளது. தற்போது உள்ள முதல்- அமைச்சர் நம்மைக் காக்கும் 48 என்ற திட்டத்தை கொண்டு வந்து உள்ளார். இந்த திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டு உள்ளது.

மகளிர் உரிமைத் தொகை

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கப்பட்ட மறுநாள் அனைவரின் வீட்டின் முன்பு முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து பெண்கள் கோலம் போட்டனர்.

இதை காணும் போது ஒரு நிமிடம் நான் ஆனந்த கண்ணீர் வடித்தேன். இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் ரூ.ஆயிரத்தை எதிர்ப்பார்த்து தமிழகத்தில் பல லட்சம் பேர் உள்ளனர். தகுதியான மகளிர்கள் விடுபட்டு விட கூடாது என்று அவர்களிடம் மீண்டும் மனுக்கள் வாங்கி கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர்களுக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

தி.மு.க. எப்போது எல்லாம் ஆட்சிக்கு வருகின்றேதோ. அப்போதெல்லாம் கிராமங்கள் வளர்ச்சி பெற்று வருகின்றன. எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த ஆட்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பெ.சு.தி.சரவணன், மு.பெ.கிரி, அம்பேத்குமார், மாநில தடகள சங்கத் துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் தரணிவேந்தன், உடல் உழைப்பு வாரிய உறுப்பினர் ஸ்ரீதரன், திருவண்ணாமலை ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, துணைத்தலைவர் ரமணன், ஆணையாளர் பிரித்திவிராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருணாச்சலம், தி.மு.க. மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் மெய்யூர் சந்திரன், கோவிந்தன், அருணை வெங்கட், பறையம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்