சென்னை மந்தைவெளியில் உள்ள சாலைக்கு 'டி.எம்.சவுந்தரராஜன் பெயர்' முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மந்தைவெளியில் உள்ள சாலைக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. அதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.;
சென்னை,
தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் 1923-ம் ஆண்டு மதுரையில் பிறந்தார். தன்னுடைய இளம் வயதிலேயே இசைப் பயிற்சி பெற்று இசை ஞானத்தை வளர்த்தார்.
1950-ம் ஆண்டு முதல் அரை நூற்றாண்டு காலம் தமிழ்த் திரையுலகில் சிறப்புமிக்க பாடகராக திகழ்ந்த அவர், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி, தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் நீங்கா இடம் பிடித்தார்.
மந்தைவெளி சாலைக்கு பெயர் சூட்டல்
டி.எம்.சவுந்தரராஜனுக்கு கருணாநிதியால் 1970-ம் ஆண்டு 'ஏழிசை மன்னர்' என்ற பட்டம் வழங்கப்பட்டது. மேலும் 1969-ம் ஆண்டு கவியரசர் கண்ணதாசனால் 'இசைக் கடல்' என்றும் போற்றப்பட்டார்.
தனது குரல் வளத்தால் மக்கள் மனதில் இடம்பெற்ற டி.எம்.சவுந்தரராஜன் 25.5.2013 அன்று மறைந்தார்.
பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள மந்தைவெளி மேற்கு வட்டச் சாலைக்கு, "டி.எம்.சவுந்தரராஜன் சாலை'' எனப் புதிய பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
அவ்வாறு பெயர் சூட்டப்பட்ட சாலையின் பெயர் பலகையை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, காணொலி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமை செயலாளர் வெ.இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் டாக்டர் இரா.செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் த.மோகன், டி.எம்.சவுந்தரராஜனின் மகன்கள் பால்ராஜ், செல்வக்குமார், மகள் மல்லிகா மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.