போதைப்பொருள் பரவலுக்கு மத்திய அரசே காரணம் -அமைச்சர் பொன்முடி பேட்டி

போதைப்பொருட்கள் இந்த அளவுக்கு பரவி இருப்பதற்கு மத்திய அரசே காரணம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.

Update: 2022-09-02 00:10 GMT

சென்னை,

மாணவர்கள், இளைஞர்கள் இடையே அதிகமாகிவரும் போதைப்பொருட்கள் பழக்கத்தை நிறுத்தவேண்டும் என்றும், அதற்கேற்றாற்போல் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் கலெக்டர்கள், காவல்துறை மாநாட்டில் தெரிவித்தார். இந்த போதைப்பொருட்கள் பழக்கம் அதிகமாகி வருவதை தடுக்க தமிழ்நாடு மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது. இதை மத்திய அரசு முழுமையாக செய்ய வேண்டும். குறிப்பாக போதைப்பொருட்கள் இந்த அளவுக்கு பரவி இருப்பதற்கு காரணம், மத்திய அரசுதான்.

அதுவும் பிரதமர் நரேந்திரமோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில்தான் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கின்றன. குற்றம் சாட்டுவதற்காக சொல்லவில்லை. சுட்டிக்காட்டுகிறோம். குஜராத்தில் இருக்கும் துறைமுகம் தனியார்மயமாக்கப்பட்டு விட்டது. வெளிநாட்டில் இருந்துதான் போதைப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. தனியார் துறைமுகம் வழியாகத்தான் இவைகள் வேகமாக கொண்டு வரப்படுகின்றன. இந்த போதைப்பொருட்கள் கடத்தலில் குஜராத்தின் முந்த்ரா துறைமுகம்தான் முதலிடத்தில் உள்ளது.

பல்வேறு மாநிலங்கள், நாடுகளில் இருந்து கொண்டுவரப்படும், சொல்லப்போனால் ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் வழியாக கொண்டுவரப்படும் போதைப்பொருட்களை மத்திய அரசு முழுமையாக தடை செய்ய வேண்டும்.

சட்டரீதியான நடவடிக்கை

துறைமுகங்களை தனியார் மயமாக்கியதால், போதைப்பொருட்கள் வளர்ந்து இருக்கிறது. இதை தடைசெய்ய வேண்டும். அனைத்து எதிர்கட்சிகளும் இதை வலியுறுத்த வேண்டும். மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்தவகையில்தான் தமிழகத்திலும் போதைப்பொருட்கள் வளர்ந்துள்ளன.

விஜயவாடா துறைமுகம் வழியாக போதைப்பொருட்கள் தமிழகத்துக்கு கொண்டுவரப்படுகின்றன. முந்த்ரா துறைமுகத்துக்கும், விஜயவாடா துறைமுகத்துக்கும் தொடர்பு இருக்கிறது.

மத்திய அரசு இவைகளையெல்லாம் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் வலியுறுத்தி வருகிறார்.

வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வந்து, விற்கிறார்கள். அந்த சூழ்நிலை தமிழகத்தில் கட்டுப்படுத்த வேண்டும் என்பதை கருத்தில்கொண்டு, முதல்-அமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

மத்திய அரசு போதைப்பொருட்களை தடை செய்வதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் கோரிக்கை. யார், யார்? இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்று அறிந்து இந்திய அளவில் நடவடிக்கை எடுக்கப்படுமானால், தமிழகத்தில் போதைப்பொருட்கள் முழுமையாக இல்லாத நிலையை உருவாக்க முடியும்.

சிறப்பாக செயல்படும் தமிழகம்

தமிழ்நாட்டை பொறுத்தவரையில், 2013-2022 வரையில் ரூ.33 கோடியே 99 லட்சம் மதிப்புள்ள 952.1 டன் போதைப்பொருட்கள் கைபற்றப்பட்டன. குற்றவாளிகளை பிடித்து ரூ.2 கோடியே 88 லட்சம் அபராதம்தான் வசூலிக்கப்பட்டன.

ஆனால் கடந்த ஓராண்டில் தமிழக அரசின் நடவடிக்கையில், ரூ.9 கோடியே 19 லட்சம் மதிப்புள்ள 152.94 டன் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. ரூ.2 கோடி அபராதம் குற்றவாளிகளிடம் இருந்து பெறப்பட்டுள்ளன. இதில் ஈடுபடும் மொத்த வியாபாரிகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக ரூ.25 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான சொத்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

போதைப்பொருட்களை ஒழிக்கும் முயற்சியில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆந்திரா, தெலுங்கானா வழியாக போதைப்பொருட்கள் தமிழகத்துக்குள் கடத்தி கொண்டுவரப்படுகின்றன. அதனை தடுக்கவும் தமிழக முதல்-அமைச்சர் முயற்சித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்