மேல் கூடலூரில் கடைக்குள் புகுந்த கார்-சுற்றுலா பயணிகள் 4 பேர் காயம்
மேல் கூடலூரில் கடைக்குள் புகுந்த கார்- சுற்றுலா பயணிகள் 4 பேர் காயம்;
கூடலூர்
கேரளா, கர்நாடகா உள்பட வெளி மாநிலங்களில் இருந்து கூடலூர் வழியாக தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு சென்று திரும்புகின்றனர். பெரும்பாலானவர்கள் கார்களில் பயணம் செய்கின்றனர். சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து விட்டு மீண்டும் ஊர் திரும்புவதற்காக கார்களில் வரும்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். போக்குவரத்து விதிமுறையை முறையாக பின்பற்றாததால் இது போன்ற விபத்துகள் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை 7 மணிக்கு ஊட்டியிலிருந்து கூடலூர் வழியாக கர்நாடகாவுக்கு சுற்றுலா பயணிகள் 4 பேர் ஒரு காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மேல் கூடலூர் பகுதியில் சாலையின் வலது புறம் உள்ள கடைக்குள் புகுந்தது. இந்த சமயத்தில் அங்கு யாரும் இல்லை.
மேலும் காரில் இருந்த சுற்றுலா பயணிகளும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. இது குறித்து கூடலூர் போலீசார் விசாரணை நடத்தினர்.