தலைக்குப்புற கார் கவிழ்ந்து ஐ.டி. நிறுவன ஊழியர் பலி
போடி அருகே, தலைக்குப்புற கார் கவிழ்ந்த விபத்தில் ஐ.டி. நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார். 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஐ.டி. நிறுவன ஊழியர்கள்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குரு மாரியப்பன். அவருடைய மகன் பாலமுருகன் (வயது 25). இவர், சென்னையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இவருடன், தேனி மாவட்டம் போடி குலாலர்பாளையத்தை சேர்ந்த வசந்தகுமார் (25) என்பவரும் பணி புரிந்தார். தொடர் விடுமுறையையொட்டி வசந்தகுமார், பாலமுருகன் மற்றும் 7 ஊழியர்கள் நேற்று முன்தினம் காலை போடிக்கு வந்தனர்.
வசந்தகுமாரின் வீட்டுக்கு வந்த அவர்கள், அங்கிருந்து ஒரு காரில் போடிமெட்டு பகுதிக்கு சுற்றுலா சென்றனர். அந்த காரை, போடியை அடுத்த மேலசொக்கநாதபுரத்தை சேர்ந்த சுஜித் (23) ஓட்டினார். வசந்தகுமார் உள்பட 9 பேர் காரில் பயணம் செய்தனர்.
தலைக்குப்புற கவிழ்ந்த கார்
போடிமெட்டு சென்றடைந்ததும் அவர்கள் அனைவரும் அங்கு நிலவிய இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை பார்த்து ரசித்தனர்.
பகல் முழுவதும் அங்கேயே பொழுதை போக்கிய அவர்கள், இரவு 9 மணிக்கு மேல் அங்கிருந்து போடி நோக்கி புறப்பட்டனர். போடியை அடுத்த தர்மத்துப்பட்டி பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் தாறுமாறாக ஓடியது. ஒரு கட்டத்தில், அந்த கார் சாலையோரத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. அப்போது காரில் வந்தவர்கள் அபயகுரல் எழுப்பினர்.
உடல் நசுங்கி பலி
இந்த விபத்தில் காரின் இடிபாடுகளில் சிக்கிய பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். வசந்தகுமார் மற்றும் அவருடன் வந்த சக ஊழியர்களான நாகப்பட்டினத்தை சேர்ந்த பாலாஜி (25), சென்னையை சேர்ந்த அஸ்வின் (24), மனோஜ் (24), நஷீர் (30), தர்ஷன் (24), கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த நிதிஷ்குமார் (25), திருவள்ளூரை சேர்ந்த தமிழ்பாரதி (25) ஆகிய 8 பேர் படுகாயம் அடைந்தனர். கார் டிரைவர் சுஜித் காயமின்றி உயிர் தப்பினார்.
விபத்தை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக போடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
8 பேருக்கு சிகிச்சை
பின்னர் விபத்தில் படுகாயம் அடைந்த 8 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இவர்களில் பாலாஜி மட்டும் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே உயிரிழந்த பாலமுருகனின் உடல், பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.