சாலை தடுப்புச்சுவரில் மோதி கார் தீப்பிடித்து எரிந்தது

சாலை தடுப்புச்சுவரில் மோதி கார் தீப்பிடித்து எரிந்தது வக்கீல் உள்பட 4 பேர் படுகாயம்.;

Update:2023-03-25 02:53 IST

திண்டுக்கல்,

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 46). வக்கீல். இவரது மாமனார் பொன்னம்பலம் (வயது 78). இவருக்கு கண் குறைபாடு இருந்தது. இதற்கு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக நேற்று பொன்னம்பலம் தனது மனைவி கீதா (66), மருமகன் சந்தோஷ்குமார் ஆகியோருடன் காரில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை அதே பகுதியை சேர்ந்த சாந்தப்பன் (33) என்பவர் ஓட்டினார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில், ரங்கநாதபுரம் மின்வாரிய அலுவலகம் அருகில் சென்றபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. மேலும் கார் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சந்தோஷ்குமார் மற்றும் கீதா ஆகியோர் காரில் இருந்து வெளியே வந்துவிட்டனர்.

காருக்குள் தீயில் சிக்கியதில் பொன்னம்பலம், சாந்தப்பன் ஆகியோரின் கால்கள் தீயில் கருகின. அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டனர். பின்னர் 4 பேரையும் சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்