10 அடி பள்ளத்தில் இறங்கிய பஸ்; 30 பேர் காயம்
கீழ்பென்னாத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க டிரைவர் பஸ்சை திருப்பிய போது 10 அடி பள்ளத்தில் இறங்கி விபத்தில் சிக்கியது. இதில் 30 பேர் காயம் அடைந்தனர்.
கீழ்பென்னாத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க டிரைவர் பஸ்சை திருப்பிய போது 10 அடி பள்ளத்தில் இறங்கி விபத்தில் சிக்கியது. இதில் 30 பேர் காயம் அடைந்தனர்.
விபத்தில் சிக்கிய பஸ்
சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி நேற்று மாலை திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வழியாக அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
கீழ்பென்னாத்தூர் அருகே மலப்பாம்பாடி அருகிலுள்ள தனியார் கல்லூரி அருகே பஸ் வந்த போது, சாலையின் குறுக்கே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க டிரைவர் பஸ்சை வலது பக்கமாக திருப்பினார்.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சம்பந்தனூர் ஜங்ஷன் பகுதியில் சாலையோரம் உள்ள 10 அடி ஆழமுள்ள பள்ளத்தில் பஸ் இறங்கி விபத்தில் சிக்கியது.
30 பேர் காயம்
இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்தது. இந்த விபத்தில் பஸ் டிரைவர் முருகன் (வயது 50), மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த நம்மியந்தல் கிராமத்தை சேர்ந்த வேலாயுதம் உள்பட 30-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.