படகு அணையும் தளத்தில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வேண்டும்
கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் படகு அணையும் தளத்தில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வேண்டும் என கலெக்டருக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் படகு அணையும் தளத்தில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வேண்டும் என கலெக்டருக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படகு அணையும் தளம்
கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் உள்ளது. இங்கிருந்து தினந்தோறும் செல்லும் 400 விசைப்படகுகள், 350 பைபர் படகுகள் மற்றும் 200 நாட்டு படகுகள் மூலம் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். மேலும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் இங்கு பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த துறைமுகத்தில் விசை படகுகளை தொடர்ந்து வரிசையாக நிறுத்தி வைக்கும் படகு அணையும் தளம் உள்ளது. இந்த தளம் சிமெண்டு கான்கிரீட்டால் கட்டப்பட்டது. இது கட்டப்பட்டு சுமார் 8 ஆண்டுகளுக்குமேல் ஆகிறது.
வலிமை இழந்து உள்ளது
தற்போது இந்த கான்கிரீட் தளம் வலிமை இழந்து உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக அந்த பகுதியில் யாரும் நடந்து செல்லும் போது உடைப்பு ஏற்படவில்லை. அதனால் உயிர் இழப்பு தவிர்க்கப்பட்டது.
இதே போல் மேலும் பல இடங்கள் வலிமை இழந்து காணப்படுவதால் எந்த நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் இருந்து வருகிறது. உடைப்பு ஏற்பட்டு அடி பகுதியில் கூடு போன்ற வெற்றிடம் உள்ள பகுதியில் கடல் நீர் எந்த நேரமும் இருந்து கொண்டே உள்ளது.
புதிதாக கட்ட வேண்டும்
கான்கிரீட் தளத்தில் இருந்து அடிப்பகுதியில் சுமார் 15 அடி வரை ஆழம் உள்ளது. இதனால் அது மேலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வலுவிழந்து காணப்படும் அந்த கான்கிரீட் தளத்தை முழுவதுமாக இடித்து அகற்றிவிட்டு புதியதாக கட்ட வேண்டும்.அதுவரை இடிந்த பகுதியை தற்காலிகமாக சரி செய்ய உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழையாறு மீனவர்கள், மாவட்ட கலெக்டர் மகாபாரதிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.