மோட்டார் சைக்கிள்கள் திருடிய சிறுவன் கைது

தென்காசி, பாவூர்சத்திரம் பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-22 18:45 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சிவபார்வதிநாதன். இவர் சில தினங்களுக்கு முன்பு பாவூர்சத்திரம் மெயின் ரோட்டில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்து விட்டு, கிறிஸ்தவ ஆலயம் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது அவரது மோட்டார் சைக்கிளை யாரோ மர்ம நபர் திருடி சென்றார். இதுதொடர்பாக அவர் பாவூர்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து மர்ம நபரை தேடி வந்தனர்.இந்த நிலையில் பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் வடக்கு பஜாரில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த நபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த நபர் 17 வயது சிறுவன் என்பதும், பாவூர்சத்திரத்தில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் தென்காசி, ஆய்க்குடி பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த சிறுவனை போலீசார் கைது செய்து, 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த சிறுவனை நெல்லையில் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்