கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி

ஆத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலியானான்.

Update: 2023-01-07 19:45 GMT

ஆத்தூர்:-

ஆத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலியானான்.

சிறுவன்

ஆத்தூர் அருகே உள்ள கீரிப்பட்டி பேரூராட்சி கீழ் தொம்பை பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் சீனிவாசன் (வயது 4½). தியாகராஜன் அதே பகுதியில் உள்ள கோவிந்தன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். தற்போது அந்த நிலத்தில் சோளம் பயிரிட்டு உள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை அவர், கூலித்தொழிலாளர்களுடன் சேர்ந்து சோளத்தை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது தியாகராஜன் தனது மகன் சீனிவாசனை அருகில் அமர வைத்து விட்டு சோளம் அறுவடை பணியில் தீவிரமாக இருந்தார்.

பலி

இதனிடையே அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் சீனிவாசன், எதிர்பாராதவிதமாக அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்தான். இதனால் தண்ணீரில் மூழ்கினான். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்க முயன்றனர். மேலும் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நிலைய அலுவலர் அசோகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, கயிறு கட்டி கிணற்றில் இறங்கி சிறுவனை தேடினார்கள்.

சுமார் 1½ மணி நேர போராட்டத்துக்கு பிறகு தண்ணீரில் மூழ்கி பலியான சிறுவன் சீனிவாசன் உடலை மீட்டனர். தொடர்ந்து மல்லியகரை போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மல்லியகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிணற்றில் மூழ்கி பலியான சிறுவனின் உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்